21 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றிய எனது கணவர் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பி, சேவையிலிருந்து நீக்கப்பட்ட அநியாயத்துக்காக சரத் பொன்சேகா தற்பொழுது தண்டனையை அனுபவித்து வருவதாக அநீதி இழைக்கப்பட்ட படைவீரரின் மனைவியான சமிலா நிஷாந்தி விஜேதுங்க தெரிவித்தார்.
பத்தரமுல்லயிலுள்ள தொண்டர் படையணியின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் பொறுப்பாக செயற்பட்ட சார்ஜன்ட் மேஜர் எஸ். ஏ. எஸ். விஜேதுங்கவின் மனைவியே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது கணவரை பழிவாங்கும் வகையிலேயே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெண் இராணுவ வீராங்கனை செய்த குற்றத்திற்காக எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சரத் பொன்சேகா தனது கணவருக்கு 21 நாள் சிறைத் தண்டனை வழங்கினார். என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியாத வகையில் எனது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார். பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத்தாது இராணுவத்திலிருந்து எனது கணவர் நீக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்பது கூட தெரியாத நிலையில் எனது சின்னஞ்சிறு குழந்தைகளுடன் நான் அழுது திரிந்ததை கண்ட சில இராணுவத்தினர் எனக்கு உதவி செய்தனர்.