இலங்கை யில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் ஃபொன்சேகா சார்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையிலும் தேர்தல் முடிவுகளிலும் கணினியை உபயோகித்து மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் முடிவுகள் குறித்த உத்தியோகபூர்வ பிரகடனத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இம்மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாக்கி பலவந்தமான முறையில் தனக்கு சார்பான ஒரு முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மோசடியான வழியில் பெற்றிருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த அனுமதியின் பேரில், தடுத்துவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் கையொப்பத்தைப் பெற்று அவரது பெயரிலேயே மனுவும் ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது