கால நிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாகவே தற்போது மழை பெய்வதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் ஆனந்த பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.
இம் மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் நீங்கிவிடும் எனவும் அவர் கூறினார். இம்மழைக் காலநிலை காரணமாக கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதிக மழை பெய்யும். வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் வரையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 70.3 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதுவே நேற்று பெய்த அதிக மழை வீழ்ச்சி எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் அறுவடை செய்யப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர் நெல் கற்றைகள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நேற்று முற்பகல் வேளை ஆரம்பமான மழை இடைவிடாது பிற்பகல் நேரம் வரை பெய்தது. இதனால் ஏறாவூர், மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற நகர பிரதேச வீதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து போக்குவரத்து ஸ்தம்பித நிலை காணப்பட்டது.
செங்கலடி – பதுளை வீதியை அண் மித்துள்ள பிரதேசங்களில் இம்முறை பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலையில் அடை மழை பெய்ததனால் எதிர்பார்க்கும் அறுவடை கிடைக்காது விடலாமென விவசாயிகள் அஞ்சுகின்றனர்.