தேர்தல் மற்றும் சம்பளம் பற்றிச் சிந்திக்காது நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலனைக் கருத்திற் கொண்டு சிறந்த சேவையாற்றுவதற்கு அரசியல் தலைவர்களும் அரச அதிகாரிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் என்ற வகையில் தமக்கு படைக்கப்பட்ட பொறுப்புக்களை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குறைந்த வசதியுடைய வீட்டுத் தொகுதிகள், சேரிப்புற வீடுகள் மற்றும் தோட்டப்புற வீடுகளை அபிவிருத்தி செய்யும் ‘நகரைக் கட்டியெழுப்புவோம்’ கருத்திட்டத்தின் முதற் கட்டக் கலந்துரையாடல் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நகரை அண்டிய சேரிப்புற வீடுகள், குறைந்த வசதிகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.
நகரைக் கட்டியெழுப்புவோம் எனும் இத்துரித அபிவிருத்தி செயற்றிட்டம் எதிர்வரும் 21ம் திகதி சுபவேளையில் கொழும்பு நகரைக் கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன் முதற் கட்ட நடவடிக்கையாக கொழும்பு நகரை அண்டிய தோட்டங்கள் மற்றும் குறைந்த வசதிகளையுடைய வீட்டு தொகுதிகளுக்கான புனரமைப்பு இடம்பெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 354 வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
குடிநீர், குளியல் வசதிகள், கழிவுப் பொருட்கள் அகற்றல், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் இதனூடாகப் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் இத்திட்டத்துக்குச் சமகாலத்தில் கொழும்பு நகரை அண்டிய பிரதேசங்களின் பாதைகளைத் திருத்தி பராமரித்தல், மாடி வீடுகளின் பராமரிப்பு, நகரின் அடிப்படை வசதிகளை யும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன.
கொழும்பு நகரைக் கேந்திரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும் இச் செயற்திட்டத்தை 5 வார காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார். நேற்றைய இந்நிகழ்வில் தேசநிர்மாண அமைச்சின் செயலாளர், மின்வலு எரி சக்தி அமைச்சின் செயலாளர் உட்பட நகர அபிவிருத்தி-நீர்வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.