ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கணனி மூலம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல்செய்துள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மனுவில் அதனைக் குறிப்பிடாததேன் என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களும் சர்வதேசமும் நீதியானதென ஏற்றுக் கொண்ட தேர்தலை மோசடி என்று கூறுபவர்கள் பொதுத் தேர்தலில் இதைவிட மோசமான படுதோல்வியைச் சந்திப்பது நிச்சயமெனவும் குறிப்பிட்டார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த தேர்தல் நீதியானதென ஐரோப்பிய ஆணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த அன்றைய தினம் 4.00 மணிக்கு அத்தேர்தல் நீதியானதும் அமைதியுமானதுமெனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவருடன் இணைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கணனி மோசடியொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் அரச வளங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் குறிப்பிட்டுள்ளவர்கள் ஏன் கணனி மோசடி என் பதைக் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இவர்கள் அடுத்துவரும் தேர்தலுக்கான சூழ்ச்சிகளை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளமையே தெளிவாகிறது.
வீண் பிரசாரங்களை விட்டுவிட்டு நியாயமான அத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.
பொதுநலவாய அமைப்பின் கூற்று தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கின்றதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஐரோப்பிய ஆணைக் குழு போன்ற பிரசித்திபெற்ற அமைப்புக்கள் நியாயமான தேர்தல் என குறிப்பிடும் போது சில அமைப்புக்கள் சில சக்திகளுக்கு சார்பாக அதற்கெதிரான கூற்றுக்களைத் தெரிவிப்பதை நாம் பெரிதுபடுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் 150 ஆசனங்களைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து நல்லாட்சி யொன்றை அமைக்க முற்படும் அரசாங் கத்துக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்