சட்டம் எவரின் தராதரத்தையும் அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை

rohitha.jpgஇலங்கை யில் நடைமுறையிலுள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது எவருடைய தராதரத்தையும், அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை. அத்துடன் அரசாங்கம் எவரையும் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் செயற்படவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். சுயாதீனமாக இயங்கும் சிவில் நீதிமன்ற நடைமுறையும் இராணுவ நீதிமன்ற நடைமுறையும் எமது சட்டவாக்கத்துள் இருக்கிறது என்றும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டனின் நிழல் பாதுகாப்பு அமைச்சரான லியாம் பொக்ஸ் வெளிவிவகார அமைச்சரை நேற்று மாலை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய லியாம் பொக்ஸ் கைது செய்யப் பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா சிவில் நீதிமன்றம் ஊடாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அவரது விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையே உறவுகள் குறித்தும் பேசிய இருவரும், இரண்டாவது முறையாகவும் 58 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரிட்டன் சார்பிலும், கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *