ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் கடமையாற்றிய வேளை 4 ஆயுதக் கொள்வனவுகளில் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்தே குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு மோசடி தொடர்பான வழக்கினை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் லங்கா ஜெரத்ன நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து கடந்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்ததாகத் தெரிவித்த குற்றத்தடுப்புப் பிரிவினர்,பிரிடிஷ் போர்னியோ டிபன்ஸ் கம்பனி மற்றும் ஹய் கோப் கம்பனிகள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் 4 ஆயுதக் கொள்வனவுகளின் போதும் தாம் முறையான விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலத்தல் தெரிவித்ததாக குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.