தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னரே பெருந்தொகைப் பணம் பெட்டகத்தில் வைப்பு

gl.jpgதேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா பெருந்தொகைப் பணத்தை வங்கியின் பெட்டகத்தில் வைத்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா கூறியதற்கிணங்க, பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே அந்தப் பணத்தைக் கொண்டு பெட்டகத்தில் வைத்ததாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன கூறியுள்ளார். அவை தன்னுடைய பணம் அல்லவென்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பீரிஸ், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவையின் மற்றொரு பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டனர்.

“சம்பத் வங்கியில் பெரிய பெட்டகமொன்றைக் கேட்டிருக்கிறார்கள். அங்கு பெரியவை இல்லாததால், திருமதி அசோகா திலகரட்னவின் பெயரில் இரண்டு பெட்டகங்களையும், மற்றையவர்களின் பெயரில் மேலும் இரண்டு பெட்டகங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் அனைத்துத் திறப்புகளையும் அசோக்கா திலகரட்னவே வைத்திருந்தார்.

வேறு பெயர்களில் இருந்தாலும் பெட்டகங்களை அவர்தான் திறக்கமுடியும். நகைகள் வைக்கப்படும் பெட்டகத்தில் கற்றை, கற்றையாகப் பண நோட்டுக்களை வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கை ரூபாய்க்கு மாற்றவும் இல்லை.

வங்கியில் நடைமுறைக் கணக்கோ, சேமிப்புக் கணக்கோ ஆரம்பிக்காமல் மூடைகளில் பெட்டகத்தில் ஏன் வைத்தார்களென்று தெரியவில்லை. இலங்கையின் சட்டத்தின்படி வெளிநாடுகளிலிருந்து வரும் ஒருவர் பிரகடனப்படுத்தாமல் 15 ஆயிரம் டொலர் வரை கொண்டு வரமுடியும்.

அதற்கு மேலதிகம் என்றால் மத்திய வங்கியின் சட்டதிட்டத்தின்படி அனுமதி பெறவேண்டும். பின்னர் இலங்கை ரூபாய்க்கு மாற்றிவிடவேண்டும். நாம் சுமாராக இரண்டாயிரம் டொலர்களை மாத்திரமே தம்முடன் வைத்திருக்க முடியும். ஆனால், அசோகா திலகரட்ன பெற்றிருந்த நான்கு பெட்டகங்களில் 527,000 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் இருக்கின்றன.

அனைத்தும் புத்தம் புது நோட்டுக்கள். வரிசைக் கிரமப்படி இலக்கங்களைக் கொண்ட அவை முன்பு பயன்படுத்தப்படாத பணத்தாள்கள். இவை எங்கிருந்து, எவ்வாறு, ஏன் கிடைத்தன என்பதைப்பற்றிய விபரங்களை அறியவேண்டாமா? இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல். நீதிமன்றத்தின் அனுமதியின்படி குற்றப்புலனாய்வுத்துறையினர், வங்கி அதிகாரிகள் மற்றும் அசோகா திலகரட்ன முன்னிலையில்தான் பெட்டகங்கள் திறக்கப்பட்டன.

நூறு ஸ்ரேலிங் பவுண்கள், ஒன்றரை இலட்சம் இலங்கை நாணயத்தாள் என மூன்று நாடுகளின் பண நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் எந்தவொரு அரசாலும் இருக்க முடியாது” என்று தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சரத் பென்சேகாவின் மருமகன் மீது பாரிய மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சுட்டிக்காட்டியதுடன், சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணையானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே மேற்கொள்ளப்படுமென்றும், அதற்கு மேலதிகமாக உச்சநீதிமன்றத்திற்கே செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

“சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றமிழைத்தவர் ஆர்ப்பாட்டம் செய்விப்பதற்குத் தகுதியுடையவரென்றால், அவருக்கு விலக்களிப்பது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்” என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *