வேட்புமனு ஏற்கும் பணி ஆரம்பம்: அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும்,  ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  நுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென கட்சி வட்டாரங்கள் கூறின. ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடிவுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *