ஜனநாயக தேசியக் கூட்டணியின் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது தீர்மானத்தை அவரின் சட்டத்தரணியும் முன்னாள் எம்.பி.யுமான விஜேதாச ராஜபக்ஷ மூலம் எதிரணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அறிவித்திருக்கிறார். இதனை விஜேதாச ராஜபக்ஷ நேற்று உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக விரைவாகத் தீர்மானம் எடுக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுள்ள நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.தே.க.விலோ அல்லது ஜே.வி.பி.யிலோ இணைந்து போட்டியிடுவதில்லை என ஜெனரல் பொன்சேகா முன்னர் கூறியிருந்தார். இதனடிப்படையிலேயே தனது கட்சியின் மணிச்சின்னத்தை கைவிட்டு ஜனநாயக தேசிய கூட்டணியின் சின்னமான வெற்றிக்கிண்ணத்தை ஜே.வி.பி. நேற்று தேர்ந்தெடுத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் அணியும் இச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக ஜே.வி.பி. கூறியுள்ளது. இதனை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை ராஜகீய மாவத்தையிலுள்ள ஜெனரலின் அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடு இடம்பெறுமென ஜே.வி.பி. கூறியுள்ளது.இன்று ஜெனரலின் அலுவலகத்தில் இடம்பெறும் செய்தியாளர் மாநாட்டில் பொன்சேகாவின் பாரியார் அனோமா கலந்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக் கிண்ணத்தில் போட்டியிடுவதென பொன்சேகா தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலைப் போன்று எதிரணிக் கட்சிகள் பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது சாத்தியமற்றது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.