அடுத்த அரசாங்கத்தில் 35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதே தனது இலக்குகளில் ஒன்று என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.ஏப்ரலில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறிய அமைச்சரவையே ஏற்படுத்தப்படும் என்றும் தற்போதைய அமைச்சரவையில் செயற்பாட்டுத் திறனுடன் கருமமாற்றாதவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
செயற்பாட்டுத் திறனை அடிப்படையாகக் கொண்டு பல அமைச்சர்களை அகற்றுவேன். புதிய அரசாங்கத்தில் சில பெரிய பெயர்கள் இடம்பெறுவதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறியதாக கொழும்பு பேஜ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.உலகிலேயே பாரிய அமைச்சரவைகளில் ஒன்றாக இலங்கையின் அமைச்சரவை உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சுமையாகும். இலங்கையில் அமைச்சர் ஒருவரின் பணியாட்கள், பாதுகாப்பு வாகனங்கள் என்பனவற்றுக்கான செலவினம் அதிகமென விமர்சிக்கப்படுகிறது.
தற்போதைய அரசில் 51 அமைச்சர்களும் 39 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் 19 பிரதி அமைச்சர்களும் உள்ளனர்.தனது அடுத்த இலக்கு ஊழல் விரயத்தை இல்லாதொழிப்பதுவும் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பதுவுமே என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.தமது சிறப்புரிமைகளை அமைச்சர்கள் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாகவும் அதிகளவுக்கு செலவிடுவதாகவும் பல முறைப்பாடுகள் ஜனாதிபதிக்கு கிடைத்திருப்பதாக ஜனாதிபதியுடன் நெருங்கிய வட்டாரமொன்று தெரிவித்ததாக கொழும்பு பேஜ் குறிப்பிட்டுள்ளது