இராணு வத்தினால் கைதாகி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அறிவித்திருக்கும் அரசாங்கம், குற்றவியல் கோவை நாணயப் பரிமாற்றச் சட்டம் என்பவற்றின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தொடரவிருப்பதாகவும் தெரிவித்தது.
சுமார் 40 வருடங்கள் இராணுவச் சேவையிலிருந்து இராணுவத்தளபதியாக பதவி வகித்து பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அரசியலில் பிரவேசித்த ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு வந்தது. இதனடிப்படையில் ஜெனரல் பொன்சேகா இராணுவத்தினரால் இம்மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அவர் மீதான விசாரணைகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வரும் நிலையில் சட்டமா அதிபர் சிவில் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்தார். அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது; ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இராணுவம் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அது முடிவுற்றதன் பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தல் போதுமான சாட்சியங்கள் இருக்குமிடத்து அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம்.
அது அவ்விதமிருக்க அரசாங்கத்துக்குக் கிடைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கமைய அவர்மீது சிவில் நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றது.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றப்பத்திரத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்படவிருக்கின்றன.இராணுவத்துக்கு ஆயுதங்கள் உபகரணங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற ஊழல் தொடர்பானது இது றைகோப் நிறுவன ஊழல் மோசடியாகும்.அடுத்தது இராணுவத்தை பிளவுபடுத்தி அரசுக்கு எதிராகச் செயற்படத்தூண்டியமை, மூன்றாவது தப்பியோடிய இராணுவத்தினரை அணிதிரட்டி தனது தேர்தல் பிரசாரப்பணிகளுக்குப் பயன்படுத்தியமை. இவற்றுக்கு மேலதிகமாக நாணயப் பரிமாற்றச்சட்ட விதிகளுககு முரணாக பெருந்தொகையான அமெரிக்க டொலர்களை வங்கிப்பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தமையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இவற்றைச் சுட்டிக்காட்டியே சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை தயார்படுத்தி வருகின்றார்.இந்த சிவில் வழக்குக்குப் புறம்பாக ஜெனரல் பொன்சேகா மீதான இராணுவ விசாரணை தொடர்ந்து இடம்பெறும்.அத்துடன், ஒரு உயர் இராணுவ அதிகாரிக்கு வழங்கப்படும் சகல வசதிகளும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, ஜெனரல் சரத்பொன்சேகா கைது விவகாரத்தை உள்ளூர் அரசியல் சக்திகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரிதுபடுத்திக் காட்டி அரசுக்கு எதிரான விதத்தில் சர்வதேச மயப்படுத்தி அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து போதுமான பதிலாக அமைந்துள்ளது.அவரது கைது நியாயமானது என்பதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது எனவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.