பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று (2) நிறைவடை ந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. கட்சி சார்பாக வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் கட்சி செயலாளர் களுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கான இலக்கங்கள் குழுத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.
இதேவேளை இம்முறை தேர்தலில் போட்டியிடும் 7620 வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (2) நள்ளிரவு வெளியாக ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் (1) 18 மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டதோடு நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருணாகல், கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன. இது தவிர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாகவும் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன.
தமக்கு விருப்பமான அல்லது முதலாவது இலக்கத்தை பெறுவதற்காக பல வேட்பாளர்கள் தமது பெயர்களை மாற்றியிருந்ததாகவும் இதனால் விருப்பு இலக்கம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் சுமணசிறி தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை தேர்தலில் 301 சுயேச்சைக் குழுக்களும் 336 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில மாவட்டங்களில் அதிகமான சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டு மிக நீளமாக இருக்கும் எனவும் அதனால் கூடுதலான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.