அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும் போது சபைக்கு வரும் எம்.பி க்கள் கோரினால் உரிய பாதுகாப்பினை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ் வாறு தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் :-
கடந்த மாதம் 5ம் திகதி அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 8ம் திகதிவரை இதனை நீடிக்க வேண்டியுள்ளதால் பாராளுமன்ற நியதிகளின் படி பாராளுமன்றம் கூட்டப்பட்டு உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கென பாராளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
இதற்கிணங்கவே எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன் போது பாராளுமன்றத்திற்கு வருகை தரும் முன்னாள் எம்.பிக்கள் தமக்கான பாதுகாப்பைக் கோரினால் அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.