அமைச்சர் மேர்வின் சில்வாவினால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் வெற்றிக் கிண்ணத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு அவர் விடுத்த சவால் குறித்து எந்த அச்சமும் கிடையாதென ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய பட்டியல் உறுப்பினரும் ஜே.வி.பி. பாராளுமன்ற குழுத் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜனநாயக தேசிய கூட்டணியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அநுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பொதுத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வருவேன்.ஆனால் வெற்றிக்கிண்ணம் சின்னத்தில் எவராவது பாராளுமன்றத்துக்கு வந்திருந்தால் நான் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு நான் திரும்பிச் சென்று விடுவேன். பாராளுமன்றம் வரமாட்டேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அநுரகுமார திஸாநயக்க எம்.பி.;ஒருவர் தன்னிடம் இருக்கும் ஒன்றைக் கொண்டுதான் பந்தயம் கட்ட வேண்டும். ஆனால், இது புதுமையான பந்தயம் அவரால் (மேர்வின் சில்வா) தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முடியாது.அவர் எம்.பி. ஆக மாட்டார் என்பதால் நாம் இதுபற்றி எந்த அச்சத்தையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.