சமஷ்டி தீர்வை வலியுறுத்தி தமிழ்க் கூட்டமைப்பு விஞ்ஞாபனம்

jaffna.jpgஇணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி கட்டமைப்பு அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதாக அரசியல் தீர்வுகாணப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் இது ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

யாழ்நகரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே அரசியல் தீர்வு தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இச் செய்தியாளர் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் 11 வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதுடன் அவர்கள் இலங்கைத்தீவில் ஏனைய இனத்தவருடன் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகவும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அதிகாரப் பகிர்வுக்கான முக்கியமான அம்சமாக கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன்,நிலம், சட்டம், ஒழுங்கு ,கல்வி, சுகாதாரம், சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள், நிதி என்பனவற்றுக்கான அதிகாரங்களைக் கொண்டதாகவும் அதிகாரப்பகிர்வு அமையவேண்டுமெனவும் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வட,கிழக்கில் வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஏற்பாடு செய்தல், உயர்கல்வி வசதிக்கான ஏற்பாடுகள் வட, கிழக்கு இராணுவ சூன்யப்பகுதியாக்குதல்,இடம்பெயர்ந்த மக்களை கௌரவமான முறையில் மீளக்குடியமர்த்துதல், தடுப்பு காவலில் குற்றம் சுமத்தப்படாதிருப்பவர்களை விடுவித்தல், ஏனையோருக்கு பொதுமன்னிப்பு போன்ற வலியுறுத்தல்களும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள விஞ்ஞாபனத்தில் உரிமைகளை பெற்றுக்கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *