இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி நிலவுகிறது. இவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் இதுவரை 27 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன் தெரிவித்தார். வெளிநாடுகளில் தற்போது பணியாற்றி வரும் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களினால் வருடாந்தம் 13 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்து வருகின்றது. இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இங்கிலாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், பெங்கொக், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை கடற்பணியாளர்களுக்கு கிராக்கி இருக்கும் அதேவேளை குறிப்பாக இந்தியா, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலேயே அதிக கிராக்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
கப்பல் பணியாளர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் வகையில் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் நாட்டின் ஆறு நிலையங்களில் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கப்பலில் திருத்தங்களை மேற்கொள்ளல், கொள்கலனிலிருந்து பொருட்களை அப்புறப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த பாடத் திட்டத்தினூடாக பயிற்றுவிக்கப்படவுள்ளன.