அணிசேரா அமையமானது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதையடுத்து இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை கூறுவதற்கு விசேட நிபுணர்குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீள்பரிசீலனை செய்யக்கூடும் என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறியுள்ளன.
அணிசேரா அமையத்தின் எதிர்ப்பால் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் “ஆடிப் போயிருப்பதாக தம்மை அடையாளம் காட்ட விரும்பாத ஐ.நா. வட்டாரங்கள் டெய்லிமிரர் இணையத்தளத்துக்குக் கூறியுள்ளன. செயலாளர் நாயகத்தின் அலுவலகமானது அணிசேரா அமையத்தின் எதிர்ப்பால் நிலைகுலைந்து போயிருப்பதை அறியக்கூடியதாகவிருப்பதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. ஆதலால், இந்த விடயம் தொடர்பாக பான் கீ மூன் மீளச்சிந்திக்கக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாடுடைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை தெரிவிப்பதற்கு விசேட நிபுணர் குழுவை அமைக்கப் போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அறிவித்ததையிட்டு கடந்தவாரம் அணிசேரா அமையம் விசனத்தைத் தெரிவித்திருந்தது.
இலங்கையின் உள்நாட்டு நிலைவரம் பற்றிக் கவனத்திற்கு எடுக்காமலும் இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாராயாமலும் விசேட நிபுணர்குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் நியமிக்கவுள்ளமை குறித்து பான் கீ மூனுக்கு அணிசேரா அமையத்தின் நியூயோர்க்கிலுள்ள ஒருங்கிணைப்புப் பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.
அத்துடன், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தீர்மானமானது இலங்கை அரசின் விருப்பங்களைக் கவனத்திற்கு எடுக்காமலும் உரிய முறையிலான கலந்தாலோசனை மேற்கொள்ளாமலும் எடுக்கப்ப்டடது என்று கடந்த வாரம் அணிசேரா அமையத்துக்கு ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித ஹோகண கூறியிருந்தார்.