சேவையில் இருந்த காலத்தில் இராணுவச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரு இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் முதலாவது விசாரணை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதை நிராகரிப்பது என்ற நிலைப்பாட்டிலேயே ஜெனரல் பொன்சேகா இதுவரை இருப்பதாக அவர் தலைமை வகிக்கும் ஜனநாயகத் தேசியக் கூட்டணி நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான குற்றப்பத்திரிகைகள் இராணுவத்தால் அவருக்கு வழங்கப்பட்டுவிட்ட போதிலும் அவரைக் கைது செய்வதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் அந்தக் குற்றப்பத்திரிகைகளில் இல்லையென்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.
ஜெனரல் சரத் பொன்சேகா மீதான குற்றச் சாட்டுகளை விசாரிக்கவெனக் தனித்தனியான இரு இராணுவ நீதிமன்றங்கள் இராணுவத் தளபதியின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் விசாரணைகள் நாளை செவ்வாய்க்கிழமையும் நாளை மறுதினம் புதன்கிழமையும் ஆரம்பமாகவிருக்கின்றன.