முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
இதற்கமைய புதிய நீதிபதிகளின் பெயர்கள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று பரிந்துரைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகள் இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளனரென்றும் குறிப்பிட்டார். இராணுவ சட்டத்திற்கு அமைய இரு இராணுவ நீதிமன்றங்களுக்கு ஒரே நீதிபதியை நியமிக்க அனுமதி இருக்கின்ற போதிலும் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் அதி உயர் வெளிப்படை தன்மையையும், நியாயமும் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.