நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்க ஒருவரை மீன்வெட்டும் கத்தியால் வெட்டிக்கொலை செய்த சிலர் கொலையுண்டவரின் இரு கைகளையும் எடுத்துச் சென்ற பயங்கரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கண்டி மத்திய சந்தையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பழவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இவ்வாறு பயங்கரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
நண்பகல் 12 மணியளவில் ஆட்டோவில் திடீரென அங்கு வந்த சிலர் அந்த வியாபாரியைப் பிடித்து இழுத்து கத்தியால் வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்தனர்.பின்னரும் ஆத்திரம் தாங்காமல் அவரின் இரு கைகளையும் இறைச்சிக் கடையில் விலங்கை வெட்டுவது போல வெட்டி எடுத்துச் சென்றனர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கி.டீ.பிரேமந்திர (38 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டவராவார்.
கண்டி நீதிவான் சம்பவ இடத்துக்கு மாலை 3 மணியளவில் வந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்