புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் தாம்போதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18 ம் திகதி) வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் இப்பாலமும், தாம்போதியும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன்கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை (தள்ளாடி சந்தி), தாம்போதியும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும், இலங்கையில் கடமையாற்றும் ஜப்பான் தூதுவர் குனியோ தகஹசி விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு இப் பாலத்தைத் திறந்து வைத்தனர். இவ் வைபவத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் எம். பிக்களான சிவநாதன் கிஷோர், பி. சுமதிபால, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மதவாச்சி, மன்னார், தலைமன்னார் வரையிலான ஏ-14 வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இப் பாலமும், தாம்போதியும் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இரு தசாப்தங்களுக்கு மேலாக அழிவுற்றிருந்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இப்பாலம் இரு வருட காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தையும் தாம்போதியையும் நிர்மாணிப்பதற்கும் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக இருந்தது. இதனால் நிர்மாணப் பணிகளை சுமார் நான்கு மாதங்கள் இடை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட் டிருந்தது.
பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பயனாக இதன் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் பயனாக மன்னார் தீவுப் பகுதியில் வாழுகின்ற மக்கள் நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்த போக்கு வரத்துப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.