இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானதென அவரை விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி அவரது பாரியார் அனோமா பொன்சேகா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதியரசர்கள் குழாமிலிருந்து மேன்முறையீட்டு நீதியரசர் டி.எஸ்.சீ.லேகம் வசம் இந்த விசாரணைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததை அடுத்தே மனு விசாரணைகளின்றி அடுத்த திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதாக மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான நுவன் போபகே தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே நீதியரசர்கள் குழாமிலிருந்து விலகுவதாக நீதியரசர் லேகம்வசம் தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அனோமா பொன்சேகாவின் மனு எதிர்வரும் 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் சட்டத்தரணி போபகே கூறினார். அத்துடன், நீதியரசர்கள் குழாமில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதியரசர் அனில் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழாமின் தலைமை நீதியரசராக சத்ய ஹெட்டிகேயும் மற்றொரு உறுப்பினராக நீதியரசர் ரஞ்சித் சில்வாவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.