சனல்4 தொலைக்காட்சிக்கு ஜெனரல் அனுப்பிய இரகசிய கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. – அரசாங்கம் குற்றச்சாட்டு

இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பிரிட்டனின் “சனல்4” தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இரகசியமாக அனுப்பி வைத்த கடிதத்தின் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக அரசாங்கம் பூடகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் குறித்து கடுமையாக விமர்சித்து ஜெனரல் பொன்சேகா சனல்4க்கு அனுப்பியிருக்கும் கடிதம் தொடர்பிலேயே அரசாங்கம் இந்த சந்தேகத்தை வெளியிட்டிருக்கிறது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விவகாரம் பற்றி கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும;

“முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு சவால் விடுத்து சரத் பொன்சேகா கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பி.பி.சி.செய்திச் சேவைக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார். இந்த நிலையில் மார்ச் மாதம் முதல் வார ஆரம்பத்தில் அவர் சனல்4  (தொலைக்காட்சிச் சேவை)க்கு இரகசிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு வெந்நீர் மற்றும் குளிரூட்டி வசதிகள் இல்லையென அவர் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் பின்னணியில் இருக்கும் அரசியல், சமூக விடயங்கள் முக்கியமானவையாகும்.

சனல்4 ஐ பார்க்கும் போது, அது கடந்த காலங்களில் புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஆங்கில ஒலிபரப்பாகச் செயற்பட்டுள்ளது என்பதே எமது நம்பிக்கை. அதுமட்டுமல்லாது, இலங்கைப் படையினரை அவமதிக்கும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியதும் அந்த நிறுவனமே. எனினும் அது போலியானதென அரசாங்கம் உறுதி செய்திருந்தது.

தமிழீழ யுத்த வீரனாக கருதப்படும் பிரபாகரனின் ஊடகமான சனல் 4, ஜே.வி.பி. கூறுவது போல் சிங்கள யுத்த வீரனான சரத்பொன்சேகாவின் ஊடகமாக முடிந்தது எப்படி என்பதே எமது கேள்வியாக இருக்கிறது. இது தொடர்பாக சந்தேகம் இருக்கிறது. சனல்4 வீடியோவின் இயக்குநர் சரத்பொன்சேகா என்று சந்தேகத்தில் இருந்து கேட்கிறோம்.

சரத்பொன்சேகா கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் அந்த கடிதத்தில் சோவியத் வழக்கமொன்று இருக்கிறது. இதன் உருவாக்கத்தின் பின்னணி யார் என்பது எமக்கு தெரியும். அந்த கடிதத்தில் சோசலிசப் போக்கொன்று இருக்கிறது. அதில் சரத்பொன்சேகா தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அமைப்பையும் வரைபடமாக வரைந்து அனுப்பியுள்ளார்.

ஜே.வி.பி.யினர் ஒன்றும் இல்லாத நிலையில் ஏனையவர்களை சுரண்டி பிழைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுபோல் இப்போது சரத்பொன்சேகாவையும் அனோமா பொன்சேகாவையும் வைத்து சுரண்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஏனையோரை சுரண்டி பிழைப்பு நடத்துவதற்கு எதிரானதே மார்க்சிஸ கொள்கை. அந்த கொள்கையை பின்பற்றுவதாக கூறும் ஜே.வி.பி.யினர் அதையே மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனக்கு வசதிகள் வழங்கப்படவில்லையென சனல்4 க்கு கூறியதன் மூலம் சரத்பொன்சேகா, அவருக்கு மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த கடிதத்தின் மூலம் அவரது ஒழுக்கம், சட்டம் பற்றி சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *