வெம்பிளியில் இளைஞர்களின் குழு மோதல்!! ஐவருக்கு மார்ச் 24ல் தண்டனை!!!

Lancelot_Roadதமிழ் இளைஞர் குழுக்களிடையே வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு உள்ளனர். மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் இவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மார்ச் 24ல் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்:

ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார்.
 
பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • கிருபா
    கிருபா

    இவர்களை கோத்தபாயவிடம் ஒப்படைப்பதை தவிர வேறு எந்த சூத்திரமும் கிடையாது.

    Reply