ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு எத்தகைய அநீதியும் இடம்பெறவில்லை. 1983 யுகம் மீண்டும் உருவாகாது என்பது உறுதியென பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். மலையகத் தலைவர்களாகிய நாம் இருட்டில் செய்த தவறை வெளிச்சத்தில் ஒரு போதும் செய்யப் போவதில்லையென தெரிவித்த பிரதியமைச்சர், ஐ. நா. வில் தமிழில் உரையாற்றி தமிழினத்துக்கே கெளரவம் சேர்த்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
நுவரெலியா குதிரைப் பந்தயத்திடலில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இப் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்:- நான் பிரதி மேயராக பதவி வகித்த போதே 83 கலவரம் வெடித்தது. நுவரெலியா நகரம் தீப்பற்றியெரிந்தது. எனது செயலாளர் உட்பட பலர் அதற்குப் பலியாகினர். தற்போது நாட்டில் அத்தகைய அச்சம் இல்லை. ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியுள்ளார்.
நான் ஒரு தமிழனாக அன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதியாகவே தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறேன். நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதிக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.