முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை நடத்தினர். மாலை 4 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணையை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்தனர். இச் செய்தி அச்சுக்குப் போகும் வரை விசாரணை தொடர்ந்து இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, ஜே.வி.பி. எம்.பி அநுரகுமார திஸாநாயக்கா நாளை செவ்வாய்க்கிழமையும் மறுதினம் புதன்கிழமையும் விசாரிக்கப்படவிருக்கின்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை புலனாய்வுப் பிரிவினர் அனோமா பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கணவர் ஜெனரல் சரத் பொன்சேகா சம்பந்தமாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்து சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து விசாரிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால் அன்றைய தினம் தான் கொழும்பில் இருக்க மாட்டேன் எனவும் பிறிதொரு தினத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அனோமா பொன்சேகா தெரிவித்ததையடுத்து அந்த விசாரணையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்த புலனாய்வுப் பொலிஸார் இணக்கம் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று மாலை விசாரணை இடம்பெறவிருந்தது. இந்த விசாரணையை தாம் எப்போதோ எதிர்பார்த்திருந்ததாகவும் இவ்வளவு காலம் தாழ்த்தப்பட்டு விசாரிக்கப்படுவதுதான் புதுமை எனவும் அனோமா பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.
சனல் 4 சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவின் கடிதம் அனுப்பியது தொடர்பாகவா விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டபோது பதிலளித்த அனோமா எனது கணவருக்கு சனல் 4 உடன் எந்தத் தொடர்பும் கிடையாது எனவும் அமைச்சர் டலஸ் அழகப் பெரும மாத்திரமன்றி முழு அரசுமே ஜெனரலுக்கு எதிராகத்தானே பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அநுரகுமார மீதான விசாரணை
இதேவேளை, ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்காவிடம் விசாரணையொன்றை நடத்துவதற்காக புலனாய்வுப் பொலிஸ் பிரிவுக்கு 23 ஆம் திகதி சமுகமளிக்குமாறு அவருக்கு கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கடிதம் கிடைத்து 12 மணித்தியாலத்தில் இன்னொரு கடிதம் அதே இரகசியப் பொலிஸ் பிரிவிலிருந்து அவருக்குக் கிடைத்தது. அதில் 24 ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தது. முன்னைய விசாரணைதான் நேரம் மாற்றப்பட்டதாகக் கருதி புலனாய்வுப் பிரிவிடம் விசாரித்தபோது அப்படியில்லை அவரிடம் இரண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க மட்டுமல்ல ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த எதிரணி அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், புத்திஜீவிகள் என அனைவருமே விசாரிக்கப்படுவர். நாளை எம்மையும் சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரிக்கலாம். அதற்கு எந்த நேரமும் முகம் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று ஜனநாயக தேசிய முன்னணி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.