பொதுத் தேர்தல் தொடர்பாக ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணி தொடர்ந்தும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சுவரொட்டிகள் சகலதும் அகற்றப்படும் என்று தெரிவித்த அவர், வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, தேர்தல் தொடர்பான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பல வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 208 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பெருந்தொகையானோர் கைது செய்யப்படுவதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு பொது மக்களினதும், ஆதரவாளர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.