பெண் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் ஆயுதம் வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சுசில் கிதெலபிட்டிய நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய வெலிக்கடை பொலிஸார் நேற்று மேற் கொண்ட சுற்றி வளைப்புக்கமையவே ஐ.தே.மு வேட்பாளரும் அவரது வேன் சாரதியும் கைது செய்யப்பட்டதுடன் அவரது வாகனத்திலிருந்த 7.62 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட் டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் கூறியதாவது:- மிரிஹானை பொலிஸ் நிலையம் வந்த பெண் ஒருவர் தனக்கும் ஐ. தே மு. வேட்பாளரான சுசில் கிதெலபிட்டயவுக்குமிடையில் தொடர்பு இருந்து வந்ததாகவும் தற்போது அவர் தனக்கு அசீட் வீசி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை தன்னைத் தவிர அவருக்கு மேலும் 20 பெண்களுடன் தொடர்பு இருந்து வருவதா கவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் அவரது வாகனத்திலிருந்து 7.62 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்த வான் சாரதி கடற்படையிலிருந்து தப்பியோடியவர் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.