ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 770 மில்லியன் ரூபா செலவில் ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் கிழக்கின் வசந்தம் கருத்திட்டத்தினூடாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 250 மீற்றர் நீளத்தையும் 10.5 மீற்றர் அகலத்தையும் கொண்டது.
பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பாலத்திற்கான நிர்மாண பணிகள் 2007 நவம்பர் 17ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தன. பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப் பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இப்பாலத்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஓட்டமாவடி பாலம் பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு நேற்று மக்கள் உபயோகத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றைய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் அமீர்அலி, முரளிதரன், வேட்பாளர்களான அலி சாஹிர் மெளலானா, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் மற் றும் ஐ. ம. சு. மு. முக்கிய ஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.