2/3 பெரும்பான்மை பலத்தில் ஐ.ம.சு.மு. நம்பிக்கை கூட்டரசாங்கம் அமைக்கும் எதிர்பார்ப்பில் எதிரணி பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தமக்கு இலகுவாகக் கிடைக்குமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியாகத் தெரிவித்துவரும் நிலையில், அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாவிடினும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டரசாங்கமொன்றை அமைக்க முடியுமென்ற உறுதியான நம்பிக்கையை ஐக்கிய தேசிய முன்னணி வெளிப்படுத்தி வருகின்றது.
தேர்தலுக்கு மூன்று நாட்களே முழுமையாக இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் மேடைகளில் கடந்த இரண்டொரு தினங்களாகப் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெற்றி தம்பக்கமே சாதகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென்று நம்பிக்கை தொனிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தென்பகுதியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் என்மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பாராளுமன்றத் தேர்தலில் அந்த நம்பிக்கை மேலும் பலப்படுத்தக்கூடியதாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிகளைச் சீராக மேற்கொள்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிக அவசியமானது. அதனை நாட்டு மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இதேபோன்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் ஆளுந்தரப்பு பின்னடைவு கண்ட தொகுதிகளில் இம்முறை அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளுமெனவும் இதனூடாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது இலகுவாகிவிடுமெனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலம் தமது கட்சிக்குக் கிடைக்குமெனவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கூட்டரசாங்கத்தை தம்மால் அமைக்க முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். ஜே.ஆர்.ஜயவர்தன அறிமுகப்படுத்திய விகிதாசாரத் தேர்தல் முறையால் ஒருபோதும் எந்தவொரு கட்சியாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது எனவும் அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் மூன்று பாராளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஒரு தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடமேறியுள்ளது. இந்தத் தேர்தல்கள் எதிலுமே மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணை வழங்கப்படவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 85 ஆசனங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி கஷ்டமான காலத்தில் கூட 80 ஆசனங்களுக்குக் குறையாமல் பெற்றுக்கொள்ள முடிந்தது. இம்முறை நாம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது போனாலும் கூட கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம். அதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுடன் கூட்டரசாங்கத்தை அமைத்து நாங்களே ஆட்சியை நிறுவுவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவித்தார்.
இதேபோன்று வரக்கூடிய தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணி கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளுமெனவும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கூட்டரசாங்கத்தை அமைக்குமெனவும் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிஸாநாயக்க கூட்டரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.