தமிழ் வர்த்தகர்களிடம் 4 கோடி ரூபா கப்பம் கோரிய கோஷ்டி அட்டனில் கைது

அட்டனில் மூன்று பிரபல தமிழ் வர்த்தகர்களிடம் சுமார் 4 கோடி ரூபா கப்பம்கோரிய குழுவைச் சேர்ந்த மூவரை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மடக்கிப்பிடித்த அட்டன் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கப்பம் கோரிய குழுவைச்சேர்ந்தவர்களில் இரு ஆண்களையும் ஒரு பெண்ணையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த மூவரும் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரியவருகிறது. இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து இந்தத் தமிழ் வர்த்தகர்களிடம் தொலைபேசியூடாக கப்பம் கோரியுள்ளதுடன், பணத்தைத் தராவிட்டால் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியுமுள்ளனர்.

இதையடுத்து மூன்று வர்த்தகர்களும் அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுவர்ணசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வரவே பொலிஸ் அத்தியட்சர் தலைமையிலான பொலிஸார் கடந்த சில தினங்களாக இரகசிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். இதற்கமைய கப்பம் கோரியவர்களை அட்டன் நகரில் ஓரிடத்திற்கு வருமாறும் அங்கு வைத்து பணத்தைத் தருவதாகவும் வர்த்தகர்கள், கப்பம் கோரியவர்களிடம் தெரிவிக்கவே,வெள்ளிக்கிழமை மூவர் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களிடம் வர்த்தகர்கள் பணத்தை ஒப்படைப்பது போல் சென்றபோது அப்பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸார் கப்பக்காரர்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.இவர்களிடமிருந்து ஐந்து கையடக்கத் தொலைபேசிகளும் பல சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன. இவர்கள் தொடர்பாகவும் இவர்களுடன் தொடர்புடைய ஏனையோர் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *