TNA பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறும்! ஏகபோகப் பிரதிநிதித்துவத்தை இழப்பர்! : த சோதிலிங்கம் & த ஜெயபாலன்

imagescavpjl09.jpgஇம்முறை தேர்தலில் வடகிழக்குப் பகுதிகளில் எல்லா விதமான தேர்தல் பிரச்சார முறைகள், தந்திரங்கள் யுக்திகளையும், சுதந்திரமாகப் பயன்படுத்தியுள்ளனர். வெறுமனே சுவரொட்டிகள், கூட்டங்கள் என்று மட்டும் இல்லாமல், வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்பதும், தங்கள் சின்னங்களை வாகனங்களில் கொண்டுசென்று ஊர் ஊராக திரிந்து ஒலிபெருக்கி பாவித்து பிரச்சாரங்கள் மேற்கொள்வதுடன், தங்கள் தொகுதிகளில் பெருமளவு கட்சிக் கூட்டங்களையும் நடாத்தியுள்ளனர். தெரு நாடகங்கள் கூட இந்த தேர்தல் பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் பிரச்சாரங்கள் பலவழிகளிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தெருநாடகங்களை பல்வேறு கட்சிகள் நடாத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சகல கட்சியினரும் வீடு வீடாகப்போய் வாக்குக் கேட்பது வழமைக்கு மாறாகவே நடைபெற்றுள்ளது. இன்று (6.4.2010) தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

சுயேட்சைக் குழுக்களைப் பொறுத்த வரையில் அவர்களிடம் பாரிய பணவசதிகள் இருந்திருக்கவில்லை. ஆனால் பெரிய கட்சிகளைப் பொறுத்த வரையில் குறிப்பாக அரசு அரசுசார் கட்சிகள் ஈபிடிபி மற்றும் மக்கள் சுதந்திரமுன்ணணி மிகப் பணப் பலத்தைக் காட்டிய தேர்தல் பிரச்சாரமாக இருந்திருக்கிறது. இதைவிட ரிஎன்ஏ யில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமாரின் கட்சிகூட தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. இந்தத் தேர்தல் பிரச்சாரங்களில் வாகன தொடர் பிரச்சார அணிகள் இயங்கியுள்ளது. அதாவது 6, 7 வாகனங்கள் தொடர்ச்சியாக ஒலிபெருக்கியுடன் வடகிழக்குப் பகுதிகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் போய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் குறிச்சிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. அண்மைய எந்தக் காலத்திலும் இல்லாதளவு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் இதர பகுதிகளில் இதுபோன்ற பிரச்சாரங்கள் நடைபெற்றிருந்த போதும் வடகிழக்கில் நீண்ட காலங்களுக்கப் பின்னர் இதுதான் முதல்தரம் இப்படியான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றது.

தேர்தல் வன்முறைகள் எனும்போது ஆங்காங்கு சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் சில ஜரோப்பாவில் உள்ள ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு தேர்தல் வன்முறை என்றும், ஜனநாயக மீறல்கள் என்றும் சித்தரிக்க முற்பட்டுள்ளன. ஆனால் தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவே நடைபெற்றுள்ளது முக்கியமாக நாம் இதை கூறுவது என்பது 9 ஆசனங்களுக்கு 324 வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கும்போது வன்முறைகள் இல்லாதிருப்பதாகவே நாம் இதைக் கருத வேண்டும். சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது, வாகனங்களுக்கு கல் எறியப்பட்டுள்ளது. இவைகளை பாரிய வன்முறைச் சம்பவங்களாக நாம் சொல்ல முடியாது.

மற்றும் முக்கியமாக ஈபிடிபி மீதும் குற்றம் சாட்டப்பட்டு வெளிவந்த சாகவச்சேரி மாணவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவலாக யாழில் பேசப்பட்டது இதை உதயன் பத்திரிகை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதை ஈபிடிபியுடன் தொடர்புபட்ட சம்பவம் எனவும் ஈபிடிபி மீது குற்றம் சாட்டியும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதை ஈபிடிபி முற்றாக மறுத்துள்ளது. மேலும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர்கள் ரிஎன்ஏயின் முக்கிய வேட்பாளர்களாக இருப்பதால் இந்த செய்தியின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

சுயாதீனமாக இயங்க வேண்டிய ஊடகங்களைச் சார்ந்தவர்கள், உரிமையாளர்கள் இம்முறை தேர்தலில் குதித்துள்ளனர் குறிப்பாக உதயன் சரவணபவன், வீரகேசரி சிறீகஜன். இதன் காரணமாக பத்திரிகை ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஈபிடிபியை சாகவச்சேரி மாணவனின் கொலையுடன் சம்பந்தப்படுத்தி உதயன் மட்டுமே செய்தி வெளியிட்டிருந்தமை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உதயன் பத்திரிகை தனது கட்சிப் பிரச்சாரத்திற்கான முக்கிய இயந்திரமாக வட கிழக்கில் செயற்படும் போது இப்பத்திரிகைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

வடகிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் தேர்தலில் பாரிய ஆர்வம் காட்டவில்லை ஆனால் வேட்பாளர்கள் கடுமையான பிரச்சாரப் போட்டிகளில் ஈடுபட்டுள்ளனர். 9 வேட்பாளர் தெரிவுக்கு 324 பேர் போட்டியிடுவதை பலபேர் பங்கு பற்றும் ஜனநாயகமாக பார்க்கப்படுகின்ற போதிலும் இந்த அதீததொகையான பங்கெடுப்பு ஒரு ஜனநாயக கேலிக்கூத்தாகவே தெரிகிறது.

பயங்கரவாதம் ஆயுத வன்முறை இருந்தகாலத்தில் மக்கள் அடக்கப்பட்டிருந்ததின் பின்னர் ஜனநாயக சூழ்நிலை ஏற்ப்பட்டபோது மக்கள் தாமே பிரதிநிதித்துவம் கொடுக்க முன்வருகிறார்கள் என்று பார்க்க நாம் முனைகின்ற போதிலும், இந்த தொகையான வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பது ஒரு சமனற்ற நிலைமை உள்ளதை அவதானிக்ககூடியதாக இருக்கிறது. இது மக்களையும் தேர்தலில் இருந்து என்ன இது? ஏன் இது? என்ற யோசனையை உருவாக்கிவிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 2 லட்சத்து 50ஆயிரம் வாக்காளர்கள், 324 வேட்பாளர்கள் என்பது ஒரு சிரிப்பாகவே உள்ளது.

யாழ் மற்றும் வட-கிழக்குப் பகுதிகளில் பொலீஸ் இராணுவ பாதுகாப்புப் படையினர் மிகவும் நடுநிலைமையாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாரபட்சமாகவோ அல்லது சார்ந்தோ நடந்ததாக எந்த தகவல்களும் இல்லை. பணபலம் பொருந்திய கட்சிகள் மிகவும் மும்முரமாகவே உதாரணமாக அரசசார்பு கட்சிகள் முன்னணியிலிருந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் அரசினால், பொலீசாரினால், அரச போக்குவரத்து சேவைகளினால், ஈபிடிபியினால் சில இடைஞ்சல்கள் ஏற்ப்படுத்தப்பட்டதாக சில தேர்தல் பிரச்சாரஙகளில் ஈடுபட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தினர். ஆனால் இம்முறை இப்படியான கருத்துக்கள் எழுவதற்க்கு கூட சந்தர்ப்பம் இல்லாமல் அரசு விடயங்களை கவனித்துக் கொண்டுள்ளது. வடகிழக்கில் எந்தப் பகுதிக்கும் யாரும் போகக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது. இரவிலும் கூட சுதந்திரமாக நடமாட முடிகிறது.

யாழில் ஜனாதிபதி பேசிய விடயம் தமிழர்களை இழிவுபடுத்தியதாக ஜரோப்பாவில் நடைபெறும் பிரச்சாரங்கள் உட்பட மற்றய எந்தப் பிரச்சாரங்களும் இலங்கை வட கிழக்குப்பகுதிகளில் பிரதிபலிப்பை செய்வதாக இல்லை. அரசு மீது தமிழ் மக்கள் எதிர்ப்புணர்வை வைத்திருக்கிறார்கள் அதை பிரதிபலித்து தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கிறார்களே தவிர மற்றும்படி அரச மேற்கொள்ளும் எந்த நடவடிக்கை மீதும் மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அரசு மீதுள்ள வெறுப்பு போன்றே தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் மீதும் வெறுப்பாக இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது, இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டாததிற்கும் இந்த தமிழ் கட்சிகள் மீதுள்ள வெறுப்பும் ஒரு காரணமாகவே உள்ளது.

தற்போது இந்த தேர்தலில் நிற்கும் தமிழ் வேட்பாளர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் அல்ல என்ற எண்ணப்பாடு மக்களிடையே பரவலாக உள்ளது. மக்கள் தேர்தலில் ஆர்வமாக இல்லாததிற்கு இதை முக்கிய காரணமாக கூறமுடியும்.

இந்த தேர்தலில் ரிஎன்ஏ ஏகப்பிரதிநிதித்துவத்தை இழந்து விடும். கடந்த தேர்தலில் 22 ஆசனங்களைப்பெற்ற ரிஎன்ஏ இம்முறை பத்து ஆசனங்களுக்கு உள்ளாகவே தமது பிரதிநிதித்தவத்தை பெறும் என்பதே இந்த சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது தெரிகின்றது ஆனால் வடகிழக்கு பகுதிகளில் பெரும்பான்மை ஆசனங்களை ரிஎன்ஏ தான் பெறும் நிலை உள்ளது ஆனால் ஏகப்பிரதிநிதித்துவத்தை இழந்துவிடுவார்கள்.

வடகிழக்குப் பிரதேசங்களில் 25 சதவிகித ஆசனங்களை தமிழ் மக்கள் இழப்பர் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பெரும்பாலும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி போன்ற பிரதேசங்களில் 5 அல்லது 6 ஆசனங்களை முஸ்லீம் அல்லது சிங்கள பிரதிநிதிகளுக்கு இழந்து விடுவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது தமிழர்களில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அண்ணளவாக 25 சதவிகித்ததால் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளது. மக்கள் பல்வேறு கிராமங்களுக்கு மீள் குடியேற்றப்படாமலும் அரசின் உத்தரவை எதிர்பார்த்தும் உள்ளனர். இம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு திட்டவட்டமான கால அட்டவணை அரசு வழங்காமல் இருப்பது அந்த மக்களுக்கு அரசுமீது மிகுந்த வெறுப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

முகாம்களில் உள்ள கிளிநொச்சி மக்கள் தமிழ் அரசியற் கட்சிகள், தமிழ் தேர்தல் வேட்பாளர்கள் மீது மிகவும் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்கள், தமிழ் அரசியல்வாதிகள் மீது மிகுந்த கோபம் கொண்டுள்ளனர். என்றுமே தங்களிடம் வராத கட்சிகள் வேட்பாளர்கள் தமது முகாம் நிலைமைகளை கவனத்தில் கொள்ளாதவர்கள் எல்லோரும் இன்று தமது வாக்கு தேவைக்காக, தமது சுயநலத்திற்காக தம்மிடம் படையெடுத்து வந்துள்ளதாக கோபம் கொண்டுள்ளனர். இம்மக்களைப் பொறுத்தவரையில் இத்தமிழ் வேட்பாளர்கள் தமது சுயலாபத்ததிற்காகவே தேர்தலில் நிற்பதாகவும் மக்கள் நலன் என்பது இவர்களின் வேசம் என்றே கருத்துத் தெரிவித்தனர்.

இந்த தேர்தலின் போக்கில் முக்கிய கருத்தாக உள்ள வேறு ஒருவிடயம் என்னவெனில் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் ரிஎன்ஏயிலிருந்து பிரிந்து தேர்தலில் நிற்கும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (காங்கிரஸ்) மீதும் மிகப்பெரும் அதிருப்தி உள்ளது. இந்த காங்கிரசின் தேர்தல், புலம்பெயர் மக்களின் அரசியலை நிர்ணயிக்கிற தேர்தலாகவும் இத்தேர்தல் அமையப்போகிறது. அதாவது புலம்பெயர் மக்களின் அரசியல் ஆதரவு கொண்ட இந்த தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வட கிழக்கில் தமிழ்மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதே உண்மை.

இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீது மிகுந்த சந்தேகம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ளது இலங்கை அரசு பல்வேறு சுயேட்சைக் குழுக்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அரசு நிதியினை வழங்கி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதே குற்றச்சாட்டு இந்த தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மீதும் உள்ளது. இலங்கை அரசின் ஆதரவுடன் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிக்கவே போட்டியிடுகிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவப்படுததும் கட்சியாக ரிஎன்ஏ தான் உள்ளது. காரணம் மாற்று, புதிய மாற்றுக்கட்சிகள் இல்லாததால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் ரிஎன்ஏ தான் என்ற எண்ணப்பாடு மக்களிடம் உள்ளது. இதனால் அரசு ரிஎன்ஏயை இந்நிலையிலிருந்து வீழ்த்த பல வழிகளிலும் முயற்ச்சிக்கின்றது. இதன் ஒரு நிலையே ரிஎன்ஏயை தடைசெய்ய வேண்டும் என்று கூறுவதும் ரிஎன்ஏ யை விடமோசமாக பிரிவினை கூறும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற (காங்கிரஸ்) கஜேந்திர குமாரின் கட்சியைப்பற்றி எதுவுமே பேசாமல் இருப்பது வெளிப்படையாகவே மக்களுக்குப் புரிந்துள்ளதை இங்கு கவனத்தில் எடுக்க வேண்டும். இந்த தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி மக்களிடமிருந்து அன்னியப்பட்டவர்களாகவே தெரிகிறது. இவர்கள் இந்தத் தேர்தலில் முற்றாக இழக்கும் வாய்ப்புக்கள் உண்டு. சில சமயங்களில் ஒரு ஆசனம்கூட கிடைக்காமலும் போகலாம்.

சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் உட்பட இடதுசாரி முன்னணி மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர். இன்று மிக முக்கிய போட்டியாளர்களாக யுஎன்பி, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஈபிடிபி உட்பட), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ரிஎன்ஏ இவர்களுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. சுயேட்சைக் குழுக்களில் யாரும் முன்னணியாளர்களாகத் தெரியவில்லை. இவர்களை அரசு வாக்குகளை சிதறடிக்கவே பயன்படுத்துகிறது. தமிழ் மக்களின் பாராளுமன்றப் போராட்டம் பயனளிக்காமல் ஆயுதமேந்திப் போராடித் தோற்ற பின்னரும் இன்றைய தேர்தல் நிலைப்பாட்டை நோக்கையில் தமிழ் மக்கள் இலங்கை அரசு மீதான நம்பிக்கையை இழந்திருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. ஆயுதப் போராட்த்தின் தோல்வியும் இயலாமையும் ஒரு காரணம் எனலாம். இவ்வளவு இழப்பினாலும் பெறாத அரசியல்த்தீர்வை இந்தத் தேர்தலால், அரசியலால் பெற முடியும் என தமிழ்மக்கள் நம்பவில்லை. இந்த ஒட்டுமொத்த விரக்தி தமிழ்மக்களை அரசியலில், தேர்தலில் ஆர்வமற்ற போக்கை உருவாக்கியுள்ளது.

இத்தேர்தலில் உள்ள அடுத்த முக்கிய விடயம் சாதிய அடிப்படையிலான தேர்வுகளாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஈபிடி கட்சி சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவே பார்க்கப்பட்டும் அறியப்பட்டும் வந்துள்ளது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவு முழுமையாக ஈபிடிபிக்கும் கல்விநிலையில் வளர்ந்த மற்றவர்கள் ஈபிடிபியை ஒதுக்கிப் பேசும்நிலையும் மிகவும் வெளிப்படையாகவே யாழ்ப்பாணத்தில் தென்படுகிறது. இது யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கிய விடயமாக இருப்பதற்கு இந்த 9 ஆசனங்களுக்கான தேர்தல் போட்டியும் ஒரு முக்கிய காரணமாகும்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் சாதிரீதியாக ஒடுக்கப் பட்டவர்களின் சார்பாகப் போட்டியிடுவது ஈபிடிபிக்கு ஒரு போட்டியாக இருக்குமோ என்ற நிலை எழுந்துள்ள போதிலும் இந்த சிறுபான்மை தமிழர் மகாசபையினர் சுயேட்சையாகப் போட்டியிடுவது வாக்கு வங்கியில் பெரிய பங்கினைப் பெறமுடியாதவர்களாகவே உள்ளனர். இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தை யாழில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர் சந்திரகுமாரும் கொண்டிருந்தார். சந்திரகுமார் ஈபிடிபி 4 ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்த போதிலும், ஈபிடிபி பெரும்பாலும் ஓரிரு ஆசனங்களைப் பெறும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் இம்முறை தேசியப் பட்டியலில் கிடைக்கும் ஆசனங்கள் பெரும்பாலும் ஈபிடிபியினர்க்கே கிடைக்கும். ஈபிடிபியினரின் வாக்குவங்கி சிதைவடையாமல் இருப்பதுவும், தமிழ்த் தேசிய கூட்டணியினரின் வாக்குவங்கி சிதைவடைந்து இருப்பதையும் வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.

வடக்கில் பெரும்பான்மை ஆசனங்களை ரிஎன்ஏயும் (10 அல்லது அதற்குக்குறைவாகவும்) ஈபிடிபி இரு ஆசனங்களையும், யுஎன்பி இரு ஆசனங்களையும், அரசுசார் மக்கள் தேசிய முன்னணி இரு ஆசனங்களையும் பெறும் சந்தர்ப்பங்கள் உள்ளது. கிழக்கில் தமிழ் மக்கள் புலிகள் இரு ஆசனங்களையும், திருகோணமலையில் ஒரு ஆசனம் சம்பந்தருக்கும், மற்றைய ஆசனங்கள் சிங்களவர்களுக்குமே போகலாம். (திருகோணமலையில் இரு தமிழ் ஆசனங்கள் இருந்திருந்தன.) வன்னியில் 3, 4 ஆசனங்கள் ரிஎன்ஏக்கும், சித்தார்த்தனுக்கு ஒரு ஆசனமும், பதியுதீனுக்கு ஒரு ஆசனமும் கிடைக்கலாம்.

TNA உள்ள ரெலோவை ஓரம்கட்டவே – வன்னியில் போட்டியிடும் செல்வம் அடைக்கலநாதனை தோற்கடிக்கவே – சூசைதாசனை வன்னியில் ரிஎன்ஏ நிறுத்தியதாக கருத்து உள்ள போதிலும் செல்வம் அடைக்கலநாதன் வன்னியில் வெற்றிபெறும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது.

இந்தத் தேர்தலில் நிற்கும் பல வேட்பாளர்கள் இன்று தமிழ் மக்களிடம் போகின்றார்கள், மக்களிடம் தீவிரமாகப் போகின்றார்கள், பணம்விரயம் செய்து போகின்றார்கள், எல்லாமே தங்களின் தேர்தல் லாபத்திற்க மட்டுமே, இந்த வேட்பாளர்கள் தங்கள் சுயநலத்திற்காகவே செய்கிறார்கள் என்பது வெளிப்படையான உண்மை இதை மக்கள் மிக உன்னிப்பாக அவதானித்தும் அதற்கேற்றாற்போல் நடந்தும் கொள்கிறார்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல என்பது இனிவரும் காலங்களில் நன்றாகவே தெரியவரும்.

மக்கள் கஷ்டப்பட்ட காலங்களில் மக்களுக்காக எதுவுமே செய்யாமல், மக்களுக்காக போராடாமால், தமது பதவிகளைத் துறந்து அரசுக்கு எதிர்ப்புக் காட்டாமலும், இன்று தமது நலனுக்காக மக்களிடம் போகிறார்கள் என்பது, வெட்கக்கேடான அரசியலில் இவர்களுக்குள்ள அக்கறையையே இது காட்டுகிறது. இவர்களது அரசியற் கூட்டங்களுக்கு மக்கள் போகாமல் இருப்பதற்கும், அக்கறையற்று இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணமாகும். இவர்களின் அரசியற் கூட்டங்களுக்கு சில நூற்றுக்கணக்கில் மக்கள் வந்தால் அது மாபெரும் கூட்டம் என்று சொல்லும் நிலையே உள்ளது. பெரும்பாலும் 100 பேர் மட்டிலேயே பெரிய கூட்டங்களுக்கு மக்கள் போயுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானோர் வேட்பாளர்களின் மிகநெருங்கிய உறவினர்களும் ஆதரவாளர்களுமாவர்.

வன்னி முகாமிற்கு வேட்பாளர்கள் வராதிருந்தமை பற்றியும், தங்கள் கஷ்டங்களில் பங்குகொள்ளாத நீங்கள் இப்போது ஏன் எம்மிடம் வருகின்றீர்கள் என்றும், பல வேட்பாளர்களிடம் மக்கள் நேரிடையாகவே கேள்வி கேட்கப்பட்டமை முக்கியமானதொன்று. மக்கள் வெளிப்படையாக யாரையும் நிராகரிக்கின்ற போக்கு இல்லாமல் மிக புத்திசாதுரியமாக இந்த வேட்பாளர்களை கையாளுகின்றனர் என்றே கருதுகின்றோம். இந்தத் தேர்தல் பலருக்கும், பல கட்சிகளுக்கும் ஒரு பாடம் கற்பிக்கும்
.
தீவுப் பகுதிகளில் நடைபெற்ற 3 தேர்தல் பிரச்சாரங்களின் கூட்ட முடிவில் அந்த மக்களிடம் பேசிப் பார்த்தபோது இத்தீவுப் பகுதி மக்கள் வெளிப்படையாகவே ஈபிடிபியினை ஆதரிப்பதை வெளிப்படுத்தினர். தமது கஷ்டமான காலங்களில் ஈபிடிபியும் தலைவரும் நேரடியாக வந்து தமக்கு உதவிகள் ஒத்தாசைகள் வழங்கியதையும் கூறுகின்றனர். இது இதர யாழ் பகுதிகளிலிருந்து வேறுபட்ட நிலையாகும். ஈபிடிபி தீவுப் பகுதிகளில் தமது கோட்டையாக வளர்த்தெடுக்கப் பட்டுள்ளனதை இது எடுத்துக் காட்டுகிறது.

** இந்த தமிழ் தேர்தல் வேட்பாளர்களில் பலர் மக்கள் வன்னி முகாம்களில் இருந்தபோது அரசுக்கெதிராக எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. அன்றும் இன்றும் தமது ஏகபோக, சுயநல அரசியலுக்காகவே செயற்படுவதாகவே எமக்குத் தென்படுகிறது.

** ஜக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர்கள்- ‘நீங்கள் யாருக்கும் வாக்களியுங்கள், ஆனால் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குப் போட வேண்டாம்’ என்பது, அரசு பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்ற பயப்பாடு கொண்டுள்ளதையும், அதனால் முயற்சி செய்து 2 /3 பெரும்பான்மையை தவிர்க்கப் பார்ப்பதாகவே தெரிகிறது.

** தமிழ் தேர்தல் வேட்பாளர்களில் சிலர் ஊடகங்களில் பணிபுரிபவர்கள். இதன் காரணமாக ஊடகங்களின் நம்பிக்கைத்தன்மை கேள்விக்குள்ளாகியதை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறோம்.

** தேர்தல் வாக்குச் சீட்டில் வாக்காளர்களது அடையாள அட்டை இலக்கம் பதித்தே வாக்குசீட்டு வருவதாலும் அதன் அடையாளத்தை நிரூபிக்க அடையாள அட்டை பாவிக்கப் படுவதாலும் தேர்தலில் கள்ளவாக்குகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுவதாகவே எமக்குத் தெரிகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • மாயா
    மாயா

    புலிகளது அழிவுக்குப் பின் , மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கிறார்கள் என்பதில் மகிழ்வாக இருக்கிறது. வாக்கு யாருக்கு என்பது, அந்த மக்களது விருப்பம். சாவுகளோடு பயணித்த மக்கள், சாவு பயமின்றி நடமாடுவதும் , வாக்களிக்க வாய்ப்பனித்திருப்பதும் , இன்றைய அரசின் சாதனைதான்.

    ஆயுதத்தை வீசிவிட்டு , ஜனநாயகத்தோடு போராட மீண்டும் வழி பிறந்துள்ளது. உண்மைகளை பேசி , வாக்குகளை வாங்குவது அரசியல்வாதிகளின் கடமை.

    Reply
  • BC
    BC

    //தமிழர்களின் பிரதிநிதித்துவம் ரிஎன்ஏ தான் என்ற எண்ணப்பாடு மக்களிடம் உள்ளது.//
    இவ்வளவுக்கு பின்புமா? இது மாயா கூறியதை பொய்களைப் போல உண்மைகளை தமிழர்கள் ஏற்றுக் கொள்வதில்லை, யதார்த்தங்களையும் ஏற்பவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

    Reply
  • palli
    palli

    கூட்டமைப்பு கூடிய இடங்களை கைப்பற்றும் எனதான் நான் நினைக்கிறேன், காரனம் கூட்டமைப்பின் தவறை மக்களிடம் சொல்வதை விட அரசின் புகழ் பாடுவதிலேயே மிக கவனமாக மற்றவர்கள் இருப்பதால் கூட்டமைப்புக்கு வாய்ப்புகள் அதிகம், கட்டுரையில் உள்ள பலவிடயங்கள் இலைங்கயில் வாழும் தமிழர் நிலையை சுட்டி காட்டியுள்ளது, அதை எம்மால் புலிகோபத்தால் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும் அதுவே உன்மை, அரசு செய்யும் நல்லதுகளை விட அரசு செய்த அழிவுகளே மக்கள் மனதில் நிலை கொண்டு உள்ளது; இந்த நிலை மாற மாற்று அமைப்புகள் அரசுக்கு காவடி தூக்கும்வரை புலி கூட்டமைப்பு அணிதான் தமிழர் மனதில் இருப்பார்கள்; தேர்தல் முடிவுகளுடன் அரசின் புதிய முகம் தெரியவரலாம்; கூட்டமைப்பை நான் நியாயபடுத்தவில்லை; ஆனால் அவர்களுக்கு சாதகமாகதான் எதிரணியினர் செயல்படுகின்றனர்; இதில் கழகம், தோழர் அமைப்பு(தோழர் அல்ல) முன்னணி வகிக்கின்றன;

    Reply
  • BC
    BC

    தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவவற்கு செய்த எந்த நன்மைகளால் கவரப்பட்டு மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள்? இனவாததில் ஊறிப்போய்யுள்ளார்கள். இது மாற நீண்டகாலம் எடுக்கும்.

    Reply
  • kalaignar
    kalaignar

    Sri Lanka poll monitoring group, the Center for Monitoring Election Violence (CMEV) has said that Internally Displaced Persons (IDPs) who were previously housed at the Chettikulam welfare camp and later resettled in Kilinochchi have lost their votes.

    CMEV Coordinator D.M. Dissanayake has told the media that the IDPs had been brought to the Chettikulam camp only to be told by the officials that they had no vote.

    According to the CMEV official, there were long lines witnessed at the Chettikulam polling center.

    Reply
  • Ajith
    Ajith

    The purpose of the article is to justfy the violence and racist rule by Rajapakse and its thugs is very clear. Why just only 30% turn out in tamil areas of North-East? It shows the North-East tamils are not prepared to accept the forced democracy by Sinhala racist regime. Elections itself not a measure of democracy. Even during LTTE period, people voted without fear or intimidation like now. Even Sinhalese are feared to vote because during 60 years of independence this is the first time a dictatorship is prevail in Sri Lanka.

    Reply
  • santhanam
    santhanam

    கூட்டமைப்பு கூடிய இடங்களை கைப்பற்ற வேண்டும் காரணம் எங்களிற்தகு தனித்துவமான ஒரு அரசியல் கட்டமைப்பு வடக்கு கிழக்கில் அவசியமான தேவை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //.., அதை எம்மால் புலிகோபத்தால் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும் அதுவே உன்மை,…..//
    உண்மையை இப்போதாவது ஒத்துக்கொண்டீர்களே. நன்றி பல்லி.

    //….. சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது, வாகனங்களுக்கு கல் எறியப்பட்டுள்ளது. இவைகளை பாரிய வன்முறைச் சம்பவங்களாக நாம் சொல்ல முடியாது…..// ஒஹோ…அப்படியா? ஆனால் மாவீரர் நிகழ்வில் மாற்றுக்கருத்தாளர்களின் நோட்டீஸ் கிழிப்பு, பேப்பர் எரிப்பெல்லாம் மாபெரும் ஜனநாயக மிறல்களாகச் சொல்லப்பட்டதே?

    ///…மேலும் உதயன் பத்திரிகையின் உரிமையாளர்கள் ரிஎன்ஏயின் முக்கிய வேட்பாளர்களாக இருப்பதால் இந்த செய்தியின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது….//
    உண்மைதான். ஆனால் மக்கள் தமக்குத்தெரியும் என்கிறார்களே. அத்துடன் நீதிபதி பிறப்பித்த பிடியாணை பற்றிச் சொல்ல வசதியாக மறந்து விட்டீர்களே !

    //….ஒன்று ஈபிடிபியினர் ஜக்கிய தேசியக்கட்சி கட்சி மீது தாக்குதல் நடாத்தியதாகவும் மற்றையது யாழ் மேயர் மீது துப்பாக்கிப் பிரயோகம் என்பதுவுமாகும்…//

    இதை யாழ் மேயரே சொல்லி அழுதிருந்தாரே? தனது தலைமயிரைப்பிடித்து இழுத்தார்கள், தனது தலையில் வேட்பாளரின் தந்தை துப்பாக்கியை வைத்து…என்றெல்லாம் சொல்லியும் யாழ் மக்கள் பெரிது படுத்தவில்லையா? ஏன் என்றால் இவர்களைப் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் ஐரோப்பிய வாசகர்களுக்கு தெரியாதல்லவா? அவர்கள் அறிந்ததெல்லாம் ஜனநாயக மறுப்பு, மாற்றுக்கருத்து என இவர்கள் முழங்கிய கோசங்களே!

    //.. பிரச்சாரங்கள் உட்பட மற்றய எந்தப் பிரச்சாரங்களும் இலங்கை வட கிழக்குப்பகுதிகளில் பிரதிபலிப்பை செய்வதாக இல்லை, அரசு மீது தமிழ் மக்கள் எதிர்ப்புணர்வை வைத்திருக்கிறார்கள் அதை பிரதிபலித்து தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கிறார்களே …..// என்ன சொல்ல வருகிறீர்காள்?

    Reply
  • Aras
    Aras

    சாந்தன் அவர்களே ரொம்ப குதிக்காதையுங்கோ! பேரினவாதம் திருந்தாத வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இருந்துதான் ஆகும். இவர்களுக்கு வாக்கு போட்டும் தமிழ் மக்கள் காணப் போவது எதுவுமில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…பேரினவாதம் திருந்தாத வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இருந்துதான் ஆகும்….//aras

    என்னது பேரினவாதமா? அது எங்கே இருக்கிறது. சிறுபான்மை இனம் என ஒன்றில்லை, யாவரும் சமம், வீணை என்ன வெற்றிலை என்ன…என கவிபாடியோர் இப்போது ‘புலிக்கோபத்தால்’ எமது கண்கள் தெரியவில்லை’ எனச்சொல்கிறார்கள். கட்டுரையாளர் ‘பூசிமெழுகியதை’ குறித்துக்காட்டினேன். இதிலென்ன ‘குதிக்க’ இருக்கிறது?

    Reply
  • mathan
    mathan

    இத்தேர்தலில் உள்ள அடுத்த முக்கிய விடயம் சாதிய அடிப்படையிலான தேர்வுகளாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஈபிடி கட்சி சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவே பார்க்கப்பட்டும் அறியப்பட்டும் வந்துள்ளது. சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவு முழுமையாக ஈபிடிபிக்கும் கல்விநிலையில் வளர்ந்த மற்றவர்கள் ஈபிடிபியை ஒதுக்கிப் பேசும்நிலையும் மிகவும் வெளிப்படையாகவே யாழ்ப்பாணத்தில் தென்படுகிறது. இது யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கிய விடயமாக இருப்பதற்கு இந்த 9 ஆசனங்களுக்கான தேர்தல் போட்டியும் ஒரு முக்கிய காரணமாகும்//

    இன்றைய தேர்தல் முடிவுகளும் இதையே பிரதிபலித்துள்ளது. துப்பாக்கி முனையில் சாதியத்தை ஒழித்துவிட்டோம் என புலிகள் மார்தட்டினார்கள். புலி சாகடிக்கப்பட்ட உடனேயே அதன் பிரதிபலிப்பு தெரிகிறது.

    Reply
  • Aras
    Aras

    சிறுபான்மை இனம் என ஒன்றில்லை, யாவரும் சமம், என பேரினவாதம் சொல்கையில் ஆமாம் சாமி போட்டுத்தான் தமிழ் தலைவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது.தனக்குப் பிறகு எதிர்த்துப் போராடக் கூடிய சக்திகளையும் சூரிய தேவன் எப்பவோ முடித்து விட்டார். எதிர்த்து நின்று மகிந்த கையால் மோட்சம் அடைவதில் அர்த்தமில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற அவர்களுக்கு இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு வழியில்லை என நினைக்கிறார்கள். அவசரப்படாமல் பொறுத்திருங்கள்- த.தே.கூட்டமைப்பினர் தொந்திகள் வரும் 5 வருடத்தில் பெருத்திருக்குமே ஒழிய தமிழ் மக்கள் அதே தொல்லைகளோடுதான் வாழ வேண்டியிருக்கும்.

    வாக்களிக்காத மக்கள் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ஆயினும் நான் எதிர்பார்த்தது போல டக்லஸ் யாழ் மக்களின் அபிமானத்துக்குரியவர் என்பதை நிரூபித்துள்ளார்.

    Reply
  • PALLI
    PALLI

    சாந்தன் நீங்கள் பேசுவது புலி பற்றி; என் கருத்துக்கள் மக்கள் பற்றியது; இதே பல்லிதான் கூட்டமைப்புக்கு கூதமைப்பு என்னும் பெயரை சூட்டினேன்; ஆனால் இன்று அவர்களே புலியின் ஆயுதம் தம்மை வாய் கட்டியதை ஏற்று கொண்டனர், அதுக்காக அவர்களை நான் ஆதரிக்கவில்லை, மக்கள் மன நிலை இப்படிதான் இருக்கும் என சொன்னேன், உங்களால் பாலை பாலாகதான் பார்க்க முடியும்; ஆனால் பல்லியின் வயது அனுபவம் பாலை தயிர்; மோராகவும் பார்க்க வைக்கிறது,
    கவி பற்றி ஏதோ சொன்னீர்கள்; இப்போதும் கவி மாறவில்லை கூட்டமைப்பு மாறியதை கவனிக்கவும்; அதுக்கேற்றாப்போல் நக்கீரன் வரும்போது ஒரு கவி பாடினால் போச்சு, நீங்கள் கூட்டமைப்பு 13 இடங்களை கைப்பற்றியதை எண்ணி துள்ளுறியள், நானோ அரசுக்கு 03 இடங்கள் எப்படி கிடைத்தத்து என சிந்திக்கிறேன்; நான் யாருக்கும் எதிரியல்ல; ஆனால் தவறாய் இருந்தால் விமர்சிக்கவோ சரியாக இருந்தால் பாராட்டவோ என்றும் வெக்கபட்டத்தில்லை; இதில் ஒரு மகிழ்ச்சி என்ன தெரியுமா? புலிதான் தமிழர், தமிழர்தான் புலி என்னும் திருக்குறள் அழிக்கப்பட்டுவிட்டது, கூட்டி பெருக்கி பார்த்தால் மக்கள் ஆயுதத்துக்கு பிரியாவிடை செய்து விட்டனர், புலிக்கு மட்டுமல்ல;

    Reply
  • NANTHA
    NANTHA

    //புலிதான் தமிழர், தமிழர்தான் புலி என்னும் திருக்குறள் அழிக்கப்பட்டுவிட்டது, கூட்டி பெருக்கி பார்த்தால் மக்கள் ஆயுதத்துக்கு பிரியாவிடை செய்து விட்டனர், புலிக்கு மட்டுமல்ல;//

    நந்தாவுக்கு மேற்படி கருத்தோடு முற்றிலும் உடன்பாடு உண்டு!

    Reply