சிங்கள – தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சண்டை சச்சரவுகள், வாகன மற்றும் பட்டாசுவெடி விபத்துக்கள் என்பவை காரணமாக 750 பேர் காயமடைந்துள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளனர் என்று கொழும்பு, களுபோவில ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ஆரியவன்ச கூறுகையில், சிங்கள, தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சண்டை சச்சரவுகள், வாகன மற்றும் பட்டாசு வெடி விபத்துக்கள் என்பன காரணமாக காயமடைந்து 486 பேர் சிகிச்சை பெற வருகை தந்தனர். இவர்களில் 196 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகன விபத்துக்களுக்கு உள்ளாகிய 160 பேரும், கத்தி குத்துக்கு இலக்காகிய 58 பேரும், விளையாட்டின்போது காயமடைந்த 29 பேரும் கிசிச்சை பெற வந்தனர். பட்டாசு வெடி விபத்து காரணமாக ஒருவரே சிகிச்சை பெற வந்தார்.
புத்தாண்டு காலப் பகுதியில் சிகிச்சை பெற வந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிடவும் இவ்வருடம் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கைகலப்பு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். இதேவேளை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகையில், புத்தாண்டு காலப்பகுதியில் 264 பேர் சிகிச்சை பெற வந்தனர். இவர்களில் 61 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர். வீதி விபத்து காரணமாக 43 பேரும், கைகலப்பு காரணமாக 21 பேரும், வீட்டு வன்முறை காரணமாக 37 பேரும், பட்டாசு வெடி விபத்து காரணமாக 3 பேரும் சிகிச்சை பெற வந்ததாக அவர் கூறினார்.