பொதுத் தேர்தல் வாக்களிப்பு தினத்தில் நாவலப்பிட்டி தொகுதியிலுள்ள 37 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்கவென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இந்த குழுவை நியமித்திருக்கின்றார்.
ஐந்து பேரை உள்ளடக்கியுள்ள இந்த ஒழுக்காற்று விசாரணைக்குழுவுக்கு சட்டத்தரணி டப்ளியு. ஜி. கருணாஜீவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் சட்டத்தரணிகள் சாலிய மெத்திவ், சந்ரா பெர்னாண்டோ, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் செயலாளராக சட்டத்தரணி சம்பாணிபத்மசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை புதிய அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊடகவி யலாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் கட்சியின் கொள்கைகளையும் ஒழுங்குகளையும் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல தவறியதினாலேயே கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லையென தெரிவித்தார்.