தெல் தோட்டை ஹைத் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கடும் மின்னல் நேரத்தில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்த இராணுவ வீரரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்தோட்டை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கடும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன்போது கடும் காற்றும் வீசியது.
இவ்வேளையில், ஹைத் தோட்டத்தில் வீடொன்றிலிருந்த இராணுவ வீரரொருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். கடும் மின்னலின்போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இராணுவ வீரர் அவ்விடத்திலேயே கருகிப் பலியானார்.
வீட்டில் வேறு ஆட்கள் இருந்தபோதும் அவர்களுக்கு அதிக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரது சடலம் பின்னர் தெல்தோட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதேநேரம்,கடும் மழையுடன் இங்கு பலத்த காற்றும் வீசியதால் பயன்தரு மரங்கள் உட்படபல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் அடியோடும் பெயர்க்கப்பட்டுள்ளன. வீடுகள் சேதமடைந்துமுள்ளன.