முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்போது ஓய்வுபெற்ற ஜெனரல் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான நோக்கத்தில் இலஞ்சம் வழங்க முன்வந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தி அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் நேற்றுக் காலை இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.
இதில் 21 சாட்சிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் முகமட் முசம்மிலின் ஆதரவைக்கோரி அவருக்கு 4.3 மில்லியன் ரூபா இலஞ்சமாகக் கொடுத்ததாக மயோன் முஸ்தபா மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு முசம்மிலின் ஆதரவைக்கோரி இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை மூலம் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தை மயோன் முஸ்தபா மீறியிருந்ததாக நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். தொலைபேசி அழைப்புகளின் பட்டியல், ஒலிநாடா, ஒளிநாடா பதிவுகள் என்பன நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகை தொடர்பான சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அததெரண செய்திச்சேவை நேற்று தெரிவித்தது