பூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலைமைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.
சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதையிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதையிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பாளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.