ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்காக கட்சியின் செயற்குழு அடுத்த வாரம் கூடவிருப்பதாக தெரிவித்த அதன் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க அப்போது கட்சியின் உயர் மட்டப் பதவிகளில் பாரிய மாற்றம் ஏற்படலாமெனவும் குறிப்பிட்டார்.
அதற்கு முன்னர் கட்சித் தலைமைத்துவம் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் இவ்வாரத்தில் கூடி ஆராயவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த வாரத்திலேயே கூடவிருக்கின்றது. தேர்தல் தோல்வியையடுத்து கட்சிக்குள் உருவாகி இருக்கும் நெருக்கடி நிலை வலுவடைந்திருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேற வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையிலேயே கட்சியின் செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரத்தில் கூடவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.