மலையக மக்களுக்குசேவையாற்றக்கூடிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே அதனை ஏற்றுக்கொள்வதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டம் கொட்டகலை தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட மாவட்ட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பேச்சாளர் ஏ.பி.சக்திவேல் கருத்துத் தெரிவிக்கையில்;
நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சார்பில் போட்டியிட்ட மூவர் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். எமக்கு ஒரு பிரதியமைச்சுப் பதவியும் அமைச்சுப்பதவியும் வழங்க அரசு முன்வந்தது. பிரதியமைச்சுப் பதவியை எமது கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் ஏற்றுள்ளார். கால்நடை அபிவிருத்தி அமைச்சை அரசு வழங்க முன்வந்த நிலையில் அதனை நாம் ஏற்கவில்லை.
கால்நடை அமைச்சை வைத்துக்கொண்டு மலையக மக்களுக்கு பணியாற்ற முடியாது என்பதால் எமது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் அதனை ஏற்கவில்லை. மலையகத்துக்குச் சேவை செய்யக்கூடிய சமூக அபிவிருத்தி மற்றும் மனித வளத்தையும் இணைத்துத் தருமாறு நாம் கோரியுள்ளோம். இதன் மூலமே உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்.
மலையகத்தில் வீடு, குடிநீர் உட்பட பல அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதால் கால்நடையுடன் இணைந்த அமைச்சுப் பதவியை நாம் கோரினோம். இந்நிலையில், அரசாங்கம் மலையகத்தக்குச் சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவியை வழங்க இணங்கியுள்ளது. ஜனாதிபதியின் பூட்டான் விஜயத்துக்குப் பின்னர் எம்மால் பணியாற்றக்கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஏற்போம் இல்லாவிட்டால் நிராகரிப்பதெனத் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்சி, தொழிற்சங்கத்துக்கு அப்பால் சமூக ரீதியான சிந்தனை வலுப்பட்டு வருகின்றது. இதனாலேயே மாற்றுக் கட்சியின் மத்தியில் பொதுத் தேர்தலில் எமது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை மலையக மக்கள் பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர். பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கவும் மலையக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளைப்பெற்றுக்கொடுக்கவும் எமக்கு சக்தியளிக்கும் பொருட்டு கொட்டகலை நகரில் நாம் நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தில் பேதங்களை மறந்து அணிதிரளுமாறு கோருகின்றேன் என்றார்.