இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவியதாகவும் இதனால் கிடைத்த முன்னேற்றம் தெற்காசிய வலயத்துக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்துக்கும் முன்மாதிரியாகுமென்றும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் கூறினர்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை ஜனாதிபதி பெற்ற அமோக வெற்றி தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சார்க் வலய பாராளுமன்றமொன்றை அமைக்கும் நடவடிக்கை அடுத்த வருடத்துக்குள் செயற்படுத்தப்பட வேண்டுமென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு சுட்டிக்காட்டினார். அதற்காக பாகிஸ்தான் – இலங்கை மற்றும் பங்களாதேஷ் – இலங்கை என கூட்டு ஆணைக் குழுக்களை ஏற்படுத்துதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தாகும். அதேபோன்று இந்த நாடுகளுக்கிடையே விமான சேவைகளை மேலும் அபிவிருத்தி செய்யவும் பேச்சு இடம்பெற்றது.
பங்களாதேஷ் தலைநகரான டாக்காவுக்கு மிஹின் எயார் விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதியுடன் ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் எதிர்காலத்தில் பணியாற்ற பாகிஸ்தானிய மற்றும் பங்களாதேஷ் பிரதமர்கள் விருப்பம் தெரிவித்தனர்.