மனிதர்கள் மட்டுமல்ல காட்டில் வாழும் மிருகங்களும் சமுத்திரங்களும் அதில் வாழும் மீன்களும், இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட வானவெளியும் பிரபஞ்சமும் கூட அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்பதனை இன்றைய அதிநவீன தொழில்நுட்ப மற்றும் செய்தி பரிவர்த்தனை புரட்சி உலகில் காண்கின்றோம். ஏனெனில் மனிதர்களின் அரசியல் செயற்பாடுகள், இவை ஒவ்வொன்றையும் ஏதோ ஒரு வகையில் நேர்மறையாகவே எதிர்மறையாகவோ பாதிக்கின்றது. இப்படியிருக்கும்பொழுது ஊடகவியளார்கள் மட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பது அல்லது அவ்வாறு கற்பிக்க முனைவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல நகைச்சுவையானதும் கூட. மேலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும் என வரையறுப்பது வரட்டுத்தனமான வாதமாகும்.
அண்மையில் நடந்த தேர்தலில் பல வேட்பாளர்கள் ஊடகங்களில் பணிபுரிபர்களாக இருந்துள்ளனர். இவ்வாறு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவது ஏதோ ஊடகத்துறையின் கற்புத்தன்மையை களங்கப்படுத்தி விட்டது அல்லது களங்கப்படுத்திவிடும் என்ற தொனியில் கருத்துக்கள் வெளிவந்தன. இதன்மூலம் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் இந்த ஊடகங்களை வெளீயிடும் நிர்வாகிகள் அல்லது முதலீட்டாளர்கள் ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லது நடுநிலையானவர்கள் என நம்புவது, வாதிடுபது அல்லது கற்பிதம் செய்வது உண்மைக்குப் புறம்பானது. இவ்வாறு வாதிட முனைபவர்கள் ஒன்று ஊடகவியலிலிருக்கும் அரசியலை புரியாமல் எழுதுகின்றார்கள். அல்லது புரிந்தும் அந்த உண்மையை திட்டமிட்டு மறைக்க முயல்கின்றார்கள் என எண்ணவேண்டியுள்ளது. மறுபுறம் அரசியல் செயற்பாட்டில் தீவிரமாக இருந்த பலர் ஊடகத்துறையைத் தேர்தெடுத்து ஊடகவியலாளர்களாக சிறந்த பங்களிப்பை ஆற்றி ஊடகத்துறைக்கு பங்களிப்பும் செய்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. அதேவேளை ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கும் பலர் வந்துள்ளனர்.
ஒரு மனிதர் தனக்கென ஒரு அரசியல் கருத்தொன்றை கொண்டிருப்பது வரலாற்றில் என்றுமே தவிர்க்க முடியாதது மட்டுமல்ல அவசியமான ஒன்றும் கூட. அதேவேளை, பொதுசன ஊடகம் போன்ற பலமுனைக் கருத்துகளை வெளியிடக் கூடிய சாத்தியம் கொண்ட ஒரு தொழிலில் தமக்கு எதிரான கருத்துக்களையும் மதிக்கவும் கேட்கவும் கூடிய தன்மையை ஒவ்வொரு ஊடகவியளாலரும் பிரக்ஞைபூர்வமாக கொண்டிருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஊடக நிறுவனங்களும் தமது சொந்த சமூக அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு விதமான அரசியல் சமூக கருத்துக்களை அது தொடர்பான விவாதங்களை விமர்சனங்களை நேர்மையாக வெளியிடுபவர்களாக இருக்கும் பொழுதே ஒரு ஊடகமானது ஒரு சமூகத்தின் காலக்கண்ணாடியாக செயற்படுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கும். அதாவது நாம் ஒரு கருத்துடன் உடன்படவில்லையாயினும் அக் கருத்தை குறிப்பிட்ட நபர் சொல்லுவதற்கும் அதை வெளியிடுவதற்குமான உரிமையை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும் அதேவேளை அக் கருத்தை பிரசுரிக்கவும் வேண்டியது பொதுசன ஊடகங்களின் கடமையும் பொறுப்புமாகும். அப்பொழுதுதான் ஊடக தர்மம் பக்கச்சார்பின்றிப் பேணப்படுகின்றது எனக் கூறலாம். இதற்குமாறாக ஒரு ஊடக செய்தியாளராக அல்லது அதன் நிறுவனராக தனக்கிருக்கும் அதிகாரத்தினால் தனது கருத்துக்கு எதிரான கருத்தை வெளியிடாது புறக்கணித்து இருட்டடிப்பு செய்யும் பொழுது ஒரு ஊடகவியளாளராக, பொதுசன ஊடகமாக இத் தொழிலின் நடுநிலை தர்மத்தை மதிக்காது மீறுகின்றார் அல்லது மீறுகின்றது எனக் கூறலாம்.
இக் கட்டுரையின் நோக்கம் ஊடகவியளர்கள், மற்றும் தொடர்பூடக நிறுவனங்கள் என்பன அரசியலுடன் நேரடியாகவோ அதாவது வெளிப்படையாவோ அல்லது மறைமுகமாகவோ உறவைக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதே. இந்த உறவு தொடர்பாக நாம் ஆழமானதும் விரிவானதுமான பார்வையைக் கொண்டிருக்கவேண்டிய தேவையிருக்கின்றது. இது தொடர்பாக குளோபல் தமிழ் நயூஸ் மின்வலை செய்தி ஊடகத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. துரதிஸ்டவசமாக அக் கட்டுரையாளரையும் வெளிவந்த திகதியையும் மீளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அக் கட்டுரையை வாசித்ததன் விளைவே இக் கட்டுரை.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதாவது மனிதர்கள் அரசியல் மிருகம் என பொதுவாக கூறுவார்கள். பெரும்பான்மையான மனிதர்கள் தமது அரசியலை பொது இடங்களில் வெளிக்காட்ட மாட்டார்கள். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதன் மூலம் மட்டும் தமது பங்களிப்பைச் செய்து அதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். இவர்களது அரசியல் (நிலைப்பாடு) தனிப்பட்டளவில் மறைமுகமானதாகவும் பொதுவானளவில் வெளித்தெரிவதானதாகவும் இருக்கும். மனிதர்களில் சிலர் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது ஆற்றலுக்கமைய தமது அரசியலை முன்னெடுத்துச் செயற்படுவதன் மூலம் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர். இந்த வரையறைகள் பொதுசன ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பொதுவானதாக பொருந்துவதாக இருக்கின்றது எனலாம்.
பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் தமது அரசியலை வெளிப்படுத்தாது தம்மை நடுநிலையானவர்களாக வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய தேவை தொடர்பூடகத்துறையைப் பொறுத்தவரை இருக்கின்றது. ஏனெனில் “பொதுசன ஊடகங்கள் நடுநிலையானவை” என்ற ஊடகத் தர்மத்தை முன்னிலைப்படுத்தியே தம்மை நியாயமானவர்களாக நேர்மையானவர்களாக நிலைநிறுத்த முயல்கின்றனர். இதனால் நடுநிலையான ஊடகவியலாளர் என்ற ஊடக தர்மத்தைக் காப்பதற்கும் தம்மை அவ்வாறு அடையாளப்படுத்துவதற்கும்; தமது தனிப்பட்ட அரசியலை மறைக்கவேண்டியோ அல்லது தள்ளிவைக்க வேண்டிய தேவை தம் ஊடகத் தொழில்துறை சார்ந்து ஊடகங்களுக்கும் ஊடகவியளாளர்களாக பணிபுரிபவர்களுக்கு இருக்கின்றது. இதனால் இவர்களுக்கு தனிப்பட்ட அரசியலோ அல்லது அரசியல் பார்வையோ இல்லை என்பது உண்மைக்குப் புறம்பான ஒரு கூற்றும் சற்று மிகைப்படுத்தலுமாகும். ஏனனில் இவர்கள் எந்த கருத்துக்களின் அடிப்படையில் தமது செய்திகளை மற்றும் கட்டுரைகளை எழுதுகின்றனர் அல்லது சேகரிக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் மற்றும் தமது கேள்விக்கனைகளை எவ்வாறு தொகுக்கின்றனர் என்பதைப் பொறுத்தும் ஒரு ஊடகவியலாளர்களது அரசியல் வெளிப்படும். மேலும் இவ்வாறான ஆக்கங்களில் எப்படியானவற்றை எவ்வாறு முன்னிலைப்படுத்துகின்றனர் அல்லது பின்னிலைப்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து ஊடக நிறுவனங்களின் அரசியல் வெளிப்படும்.
இதற்கு மாறாக சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமே தமது அரசியலை வெளிப்படையாக முன்வைத்து தமது கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவர்களுக்கு ஊடகத்துறை என்பது தமது அரசியலை பொது மனிதர்களிடம் முன்வைப்பதற்கானதும் இதனடிப்படையிலான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கானதுமான ஒரு சாதனமே. ஆகவே ஒரு பொதுசன ஊடகமானது அதைச் செயற்படுத்தும் நிர்வாகிகளைப் பொறுத்தும் பணியாற்றுகின்ற ஊடகவியளாலர்களைப் பொறுத்தும், ஒரு வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ அல்லது ஒரு அரசியல் செயற்பாடாகவோ பரிணாமம் பெறுகின்றது.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு அரசியல் மறைவாகவே வெளிப்படையாகவே இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகவியளாருக்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியதும் மறுக்க முடியாத ஒரு உண்மையுமாகும். ஒரு மனிதர் தனது வாழ்க்கைக்கான ஆதராமாக தனது திறன்களுக்கமைய ஊடகவியலாளர் என்ற தொழிலை தேர்தெடுக்கலாம். சில மனிதர்கள் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவும் சூழல் நிலைமைகளுக்காகவும் ஊடகவியளாளர்கள் என்ற புதிய அல்லது இன்னுமொரு அடையாளத்தை தேர்தெடுக்கின்றனர். இவ்வாறன தேர்வுக்கு தமது கருத்துக்களை வெளிக்கொண்டு வரவும் மற்றும் தொடர்ந்தும் சமூகத்தில் செயற்படுவதற்கான ஒரு வழி எனப் பல காரணங்கள் இவர்களுக்கு இருக்கலாம். மறுபுறம் ஒரு ஊடகவியளாலராக நடுநிலையானவராக முடிந்தளவு தனது ஊடக்துறைப் பணியை சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளலாம். இதற்காக தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றோ அல்லது தனக்கென ஒரு அரசியல் இல்லை என வாதிடுவதோ உண்மைக்குப் புற்ம்பானதாகவும் அவசியமற்றதாகவுமே இருக்கும். அல்லது இதன் மறுதலை, இவ்வாறு ஒருவர் கூறுவதே அவரது அரசியலை வெளிப்படுத்துகின்றது எனலாம். அதாவது ஒருவர் தனக்கு அரசியல் இல்லை என மறுப்பதும் ஒரு அரசியல் நிலைப்பாடே.
ஊடகவியளார்க்கு அரசியல் ஒன்று இருப்பதைப் போல ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது. அதவாது வியாபார மற்றும் இலாப நோக்கத்தையே பிரதானமாகவும் அடிப்படையாகவும் கொண்டு வெளிவரும் ஊடகங்களுக்கும் அரசியல் இருக்கின்றது. ஆனால் இதன் அரசியல் நேரிடையானதல்ல மாறாக மறைமுகமானது. இந்த ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை ஆக்கங்களை வெளிவிடுகின்றது என்பதிலும் அதாவது வடிவமைப்பில் இவற்றிக்கு அளிக்கப்படும் முக்கியத்தும் மற்றும் அவற்றுக்குள் மறைந்திருக்கும் உட்கருத்துக்களின் ஊடாக அதன் அரசியல் வெளிவருகின்றது எனலாம். இவ்வாறான ஊடகங்களின் அரசியலை புரிந்துகொள்வதற்கு இதன் ஆக்கங்களையும் செய்திகளையும் அதன் வடிவமைப்பையும் பல்முனைகளில் கட்டுடைப்பு செய்து ஆய்வு செய்வதன் மூலம் சாத்தியமானது. மறுபுறம் சமூக அக்கறையுடன் சமூக மாற்றத்திற்கான நோக்கத்துடனும்; அரசியல் கட்சிகள் சார்ந்தும் சாராமலும் ஆனால் வெளிப்படையாக தமது அரசியல் நோக்கங்களை முன்வைத்தும் சில பொதுசன ஊடகங்கள் வெளிவருகின்றன. இவற்றுக்கு வியாபாரம் மற்றும் இலாபம் பெறுவதற்கு அப்பால் தமது கருத்துக்களையும் பல்வேறு புதிய கருத்துக்களையும் பொது மனிதர்களிடம் கொண்டு செல்வதும் அது தொடர்பான உரையாடலை ஊக்குவிப்பதையும் மற்றும் புதிய கருத்து மேலாதிக்கத்தை நிறுவுவதையுமே நோக்கமாக கொண்டிருக்கும்.
உதாரணமாக தினகரன் போன்ற தமிழ் பத்திரிகைகள் அராசாங்க நிறுவனங்களே வெளியிடுவதால் இது எப்பொழுதும் எந்த கட்சி ஆட்சியிலிருக்கின்றதோ இது சார்ந்த அரசியலையே வெளிக்கொண்டு வருவதாக இருக்கின்றது. வீரகேசரி போன்ற பத்திரிகைககள் நீண்ட காலமாக நடுநிலையான பத்திரிகையாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட ஒரு பொதுசன ஊடக வரலாறு இதற்கு இருந்தபோதும் போதும் இதற்கும் ஒரு அரசியல் இருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாதது. இதன் அரசியல் குறிப்பாக மிதவாத தமிழ் தேசிய அரசியல் எனக் குறிப்பிடலாம். இப்பத்திரிகை பொதுவாக மலையக மற்றும் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மனிதர்களின் மிதவாத அரசியலை பொதுவாக பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் கூறலாம்.
தினக்குரல் பத்திரிகையானது வீரகேசரி பத்திரிகைக்கு மாற்றீடாக நடாளாவிய ரீதியில் வெளிவந்தபோதும், வடக்கு கிழக்கு தமிழ் தேசியத்தை குறிப்பாக யாழ் மையவாதத்தையும் மற்றும் மிதவாதமும் தீவிரவாதமும் கொண்ட கலவையாக தனது அரசியலை பிரதிநிதித்துவம் செய்கின்றது எனக் குறிப்பிடலாம். இதுபோன்று பல பத்திரிகைகள் நாடாளாவிய ரீதியில் வெளிவராமல் பிரதேச அடிப்படையில் வெளிவருவதுடன் அப் பிரதேச அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாக இருக்கின்றன. இந்தடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து நீண்ட காலம் வெளிவந்த ஈழநாடு பத்திரிகை முக்கியமானதும் ஒரளவு “நடுநிலை” போக்குடனும் ஊடக தர்மத்தை பேணி வெளிவந்ததது எனக் கூறலாம். இருப்பினும் இப் பத்திரிகையும் யாழ் மையவாத தமிழ் தேசிய அரசியலையே தனது அடிநாதமாக கொண்டிருந்தது எனக் கூறினால் தவறல்ல. இதேபோல் (யாழ்.) உதயன் ஆரம்ப காலங்களில் வியாபார நோக்கதையே பிரதானமாக கொண்டு வெளிவந்தபோதும் இதுவும் யாழ் மையவாத மிதவாத அரசியலிலிருந்து விலகவில்லை எனலாம். மேலும் யுத்த காலங்களிலும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் குறிப்பாக யாழிலிருந்து வெளிவருதால் அரசியல் முக்கியத்துவம் கொண்ட பத்திரிகையாக மாற்றம் கொண்டது என்றால் தவறல்ல.
இது போன்று ஈழமுரசு ஈழநாதம் என்ற பத்தரிகைகளும் யாழிலிருந்து வெளிவந்தன. இப் பத்திரிகைகள் தமது அரசியலை நேரடியாக வெளிப்படையாக கூறியோ முன்வைக்காதபோதும் யாழ். மையவாத தமிழ் தேசிய அரசியலை முதன்மைப்படுத்தி வெளிவந்தன எனக் கூறலாம். இதற்கு அன்றிருந்த சுழலா அல்லது பத்திரிகை நிர்வாகமாக அல்லது அதில் பணியாற்றி ஊடகவியளாலர்களா என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று. ஏற்கனவே கூறியது போல் தமது செய்திகளையும் ஆக்கங்களையும் எவ்வாறு எதனப்படையில் எழுதுகின்றனர் என்பதைப் பொறுத்தும் எதற்கு முக்கியத்துவமளித்தன என்பதைப் பொருத்தும் இவர்களது அரசியல் வெளிப்படுகின்றது. இதை ஆய்வு செய்வதன் மூலம் நிறுபிக்கலாம். இதனால் இந்த ஊடகங்களுக்கு என சொந்தமாக ஒரு அரசியல் இருக்கவில்லை என கூறி நிராகரிக்க முடியாது. மேலும் இந்த ஊடக நிறுவனங்களுக்கு பொசுசன ஊடகம் என்பது வியாபாரம் என்பதும் இத் தொழில் மூலம் இலாபம் பெறுவதும் முக்கியமானதும் பிரதானமாதுமான ஒரு நோக்கமாக இருக்கின்றது என்பதையும் குறித்துக்கொள்வது அவசியமானது. வடக்கிலிருந்து வெளிவந்த இப்பத்திரிகைகள் போன்று கிழக்கு மற்றும் மலையகத்திலிருந்தும் இவ்வாறன பிரதேச பத்திரிகைகள் வெளிவந்தனவா என்ற தகவல்களை அறியாமையினால் இங்கு குறிப்பிடாது தவிர்க்கின்றேன்.
தினமுரசு போன்ற பத்திரிகைகள் முற்று முழுதான ஜனரஞ்சக அடிப்படையில் வெளிவந்த போதும் தமிழ் தேசிய அரசியலையே பிரதானமாக கொண்டு வெளிவந்தது என்பதற்கு அரசியல் நோக்கம் மட்டுமல்ல வியாபார நோக்கமும் ஒரு காரணம் என்றால் பொய்யல்ல. திசை போன்ற பத்திரிகைகள் குறுகிய காலம் வெளிவந்தாலும் கலை இலக்கிய பார்வையை பிரதானமாக முன்வைத்தாலும் இதற்கும் தமிழ் தேசிய வாத அரசியல் இருந்தது என்பதை நிராகரிக்க முடியாது. இவற்றுக்கு மாறாக சரிநிகர் போன்ற பத்திரிகைகள் மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளிலிருந்து வேறுபடுவது அதனது வெளிப்படையான அரசியலாலும்; மற்றும் வியாபார நோக்கமற்ற அதன் தன்மையாலும் எனக் கூறுவது மிகையானதல்ல. இப் பத்திரிகையானது தமிழ் தேசிய அரசியலை பிரதானமாகவும் வெளிப்படையாகவும் முன்வைத்தாலும் குறிப்பாக தமிழ் மிதவாத அரசியலிலிருந்தும் மற்றும் புலி தலைமையின் ஏகபோக அரசியலிலிருந்தும் புலி எதிர்ப்பு இயக்கங்களின் அரசியலிலிருந்தும் தம்மை வேறுபடுத்தி ஒரளவாவது “முற்போக்கானதும்” ஆரோக்கியமானதுமான அரசியலுக்கான உரையாடல் களத்தை உருவாக்கி வெளிவந்த ஒரு பத்திரிகை எனக் குறிப்பிடலாம். இப்படி ஒவ்வொரு ஊடகங்களும் தமது அரசியலை ஏதோர ஒரு வகையில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்தி வந்துதுள்ளன, வருகின்றன.
இதுபோலவே இன்றைய தொழில்நுட்ப தொடர்பூடக தகவல் பரிமாற்றப் புரட்சி காலத்தில் வலை சஞ்சிகைகள் முக்கியத்தும் பெற்றுவருகின்றன என்பது நாமறிந்ததே. மேற்குறிப்பிட்ட பத்திரிகைகள் போன்று இந்த சஞ்சிகைகளுக்கும் அவர்களுக்கான ஒரு அரசியலை கொண்டுள்ளன. உதாரணமாக “தேனீ” போன்றன அரசாங்க சார்பு அல்லது அரசாங்கத்துடன் சமரச போக்கு கொண்ட அரசியலை வெளிப்படுத்தியும் புலி எதிர்ப்பும் மட்டுமல்ல தமிழ் தேசிய எதிர்ப்பு அரசியலையும் முன்வைத்து தமது செய்திகளை ஆக்கங்களை வெளியிடுகின்றன என்றால் தவறல்ல.
“தேசம்நெட்” தனக்கென ஒரு அரசியலை கொண்டிருந்தபோதும் தனது அரசியல் நிலைப்பாட்டில் இரு எல்லைகளுக்குள் மாறி மாறி பயணிக்கின்றதா என்ற சந்தேகத்தை அல்லது கேள்வியை எழுப்புகின்றது. அதாவது அரச சார்பு மற்றும் புலி எதிர்ப்பு தமிழ் தேசிய அரசியல் என்ற இரு எல்லைகளுக்குள் பயணிக்கின்றதா அல்லது பல் முனைக் கருத்துக்களுக்கு இடமளிப்பதன் மூலம் தனது நடுநிலையைப் பேணுகின்றதா என்பது ஆய்வுக்குரிய வியடம். இதற்கு மாறாக “இனியொரு” போன்றன குறிப்பாக இடதுசாரி அல்லது சமூக மாற்றத்திற்கான அரசியலை நேரடியாக முன்வைக்கின்றன. “குளோபல் தமிழ் நியூஸ்” வடக்கு கிழக்கு சார்ந்த தமிழ் தேசிய அரசியலை அடிப்படையாகவும், பிரதானமாகவும் கொண்டு ஒரு வலை ஊடகத்திற்குரிய தன்மையுடன் வெளிவருகின்றது எனக் கூறலாம். “தமிழ் நெட்” “தமிழ்வின்”, “சங்கப்பலகை” என்பன யாழ்மையவாத குறிப்பாக புலிகளின் தமிழ்தேசிய அரசியலை முன்வைக்கும் அதேவேளை தமக்கு எதிரானவர்களுக்கான எதிர்ப்பு அரசியலையும் முன்வைக்கின்றது எனக் குறிப்பிடுவது மிகையானதல்ல. இதேபோல “நெருப்பு” “அதிரடி” போன்ற வலை சஞ்சிகைகள் தாம் சார்ந்த இயக்கங்களின் அரசியலை முன்னிலைப்படுத்தியும் புலி எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுக்கின்றன எனக் கூறலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் சிறிலங்காவில் தீவிரமாக செயற்பட்ட ஊடகங்களினதும் ஊடகவியளாலார்களினதும் பங்களிப்பை குறித்துச் செல்வது நல்லது. சிறிலங்காவில் 1970 ஆண்டிலும் பின் 1987ம் ஆண்லும் ஜே.வி.பி யின் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் பின் ஊடகவியாளராக பரிணமித்திருந்தனர். இதில் குறிப்பிடக் கூடியவர்கள் “ராவய” பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன், “யுக்திய” பத்திரிகையின் ஆசிரியர் சுனந்த தேசப்பிரிய, மற்றும் இன்றைய முக்கிய அரசியல் செயற்பாட்டாளரான வீமல் வீரவன்ச பணியாற்றிய “ஹிரு” மற்றும் “லக்திவ” பத்தரிகைகள். இதில் விக்டரும் சுனந்தவும் தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகள் தொடர்பாகவும் மற்றும் பொதுவான மனித உரிமைகள் தொடர்பாகவும் அக்கறை கொண்டு மிகவும் தீவிரமாக ஊடகத்துறையில் தென்னிலங்கையில் செயற்பட்டவர்கள் எனக் கூறலாம். மேலும் தமது முழு அரசியற் செயற்பாட்டையும் ஊடகத்துறைககூடாகவே பெரும்பாலும் மேற்கொண்டது மட்டுமல்ல இச் செயற்பாடுகளும் இவர்களது ஊடகங்களும் குறிப்பான ஒரு தாக்கத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்தின என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சந்திரிகாவின் ஆடம்பரமான சமாதானப்புறா வருகையானது இருவரையும் இவர்கள் சார்ந்த ஊடகங்களையும் தடுமாறவைத்தது. அன்று விழுந்த விக்டர் ஐவன் இன்னும் அதன் அரசியலிருந்து எழுப்பவில்லை. இப்பொழுதும் மகிந்தவிற்கு சார்பாக இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
சுனந்த அறியமுடியாத சில காரணங்களால் இவ்வாறன அரசியலிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதாக தெரிகின்றது. இவர்கள் இருவரிலுமிருந்து வேறுபட்டது விமல் வீரவன்ச(வின்) சார்ந்த ஊடகத்துறை செயற்பாடு. ஏனெனில் இவர்கள் தாம் சார்ந்த ஊடகத்தை ஒரு இயக்கமாக தொலைநோக்குப் பார்வையுடனே தமது அரசியலின் அடிப்படையில் வழிநடாத்தினர் என்றால் மிகையான கூற்றல்ல. இதற்கு காரணம் இவர்கள் சார்ந்த அரசியல் கட்சி இயக்கமான ஜே.வி.பி அன்று தடைசெய்யப் பட்டிருந்தமையே. ஆகவே ஊடக செயற்பாட்டினுடாக தமது இயக்கத்தை இயங்கு நிலையில் தொடர்ந்தும் வைத்திருந்தனர். தம் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட பின் தம் ஊடகத்துறை செயற்பாட்டை, கட்சி சார்ந்த செயற்பாடாக சாதகமாக இலகுவாக மாற்றிக் கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடியளவிற்கு தம் தொடர்புகளை வலைப்பின்னல்களை ஊடகத் துறையுடாக உருவாக்கியிருந்தனர். சிங்கள தீவிரவாத “இடதுசாரி” அரசியலைப் பொறுத்தவரை இவர்களது ஊடத்துறை செயற்பாடு சாதகமானதே. ஆனால் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிப்படையில் வீமல் வீரவன்ச சார்ந்தவர்களின் ஊடகத்துறை மற்றும் கட்சி அரசியல் முன்னைய இருவரையும் விட தமிழ் பேசும் மனிதர்களது விடுதலைக்கு எதிரானதாகவும் இனவாத அரசியலாகவுமே இருக்கின்றது. வீமல் வீரவன்ச இன்றும் தனது கருத்துக்கள் செயற்பாடுகள் மூலம் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் தமிழ் பேசும் அரசியற் செற்பாட்டாளர்கள் சமூகத்தில் தாக்கம் நிகழ்த்தக் கூடியவாறு ஊடத்துறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இவர்களிடமிருந்து கற்பதில் தவறில்லை.
தமிழ் பேசும் சூழலில் இந்தளவிற்கு ஒரு ஊடகத்துறை அல்லது ஊடகவியலாளர்கள் இவ்வாறன ஒரு தாக்கத்தை செலுத்தியிருந்ததா அல்லது செலுத்தியிருந்தார்களா என்பது கேள்விக்குரியது. பல முன்னால் இயக்க அங்கத்தவர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டினாலும் அதனுடன் இருந்த ஈடுபாட்டினாலும் மேற்கொண்டு தாம் விரும்பும் அரசியலை முன்னெடுத்து செயற்பட முடியாத சூழல்நிலையாலும் பொதுசன தொடர்பூடகங்களில் இணைந்து பங்காற்றுவதனூடாக தமது அரசியலை முன்னெடு(த்தனர்)க்கின்றனர். இவர்கள் எந்தளவு பொறுப்புடன் தமது அரசியலை முன்வைத்து ஊடகத்துறையை பயன்படுத்தினர் என்பது தொடர்பாக நாம் பார்ப்பது அவசியமானது. ஏனனில் இதுவே ஊடகத்துறையிலிருந்து அரசியலுக்கு வருவதோ அல்லது அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வருவதையோ மேற்குறிப்பட்ட ஜீ.டி.என். கட்டுரையில் கேள்விக்குட்படுத்தியதற்கான பதிலைத் தரும்.
உதாரணமாக அரசியலிலிருந்து ஊடகத்துறைக்கு வந்த சிவராம் இலங்கையின் ஊடகத்துறையில் குறிப்பிட்ட தாக்கத்தை செலுத்தியவராக கருதப்படுகின்றார். இவரது சிந்தனைத் திறன் மொழியாற்றல் எழுத்தாற்றல் மற்றும் ஊடகத்துறை குறிப்பாக அவரது செய்தி சேகரிக்கும் திறன் தொடர்பாக யாரும் கேள்வி கேட்க முடியாது. இவரது இந்த ஆற்றல்கைளை அனைவரும் வியப்புடனும் மதிப்புடனும் மட்டும் பார்க்கவில்லை சந்தேகத்துடனும் பார்த்தனர் என்பது மறுப்பதற்கில்லை. ஒரு ஊடகவியலாளரா சிறந்தும் பிரபல்யமாகவும் விளங்கியபோதும் இவர் ஊடகத்துறையூடாக முன்வைத்த அரசியல் நேர்மையானதா என்பது கேள்விக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டதல்ல. இவர் அரசியலிலிருந்து விலகிய ஒரு பத்திரிகையாளராக, ஆரம்பத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கான அரசியலை அடிப்படையாக முன்வைத்ததுடன் குறிப்பாக புலிகளின் அரசியலை ஒரு புறமும் சிறிலங்கா அரசினதும் மற்றும் அவர்களுடன் செயற்பட்ட தமிழ் இயக்கங்களின் அரசியலை மறுபுறமும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்து தனது ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தவர் எனக் குறிப்பிடலாம். இவ்வாறன ஒரு போக்கை தொடர்ந்தும் பினன்பற்றியிருப்பாரேயானால் ஊடகத்துறையூடாக தமிழ் தேசிய அரசியலில் குறிப்பிட்ட தாக்கத்தை இவரால் ஏற்படுத்தியிருக்க முடிந்திருக்கும். ஆனால் காலோட்டத்தில் இவ்வாறன ஒரு நிலையிலிருந்து விடுபட்டு சிறிது சிறிதாக மாறி, இறுதிக் காலங்களில் புலிகள் சார்ந்த தமிழ் தேசியவாத அரசியலை எந்த விமர்சனமுமின்றி ஊடகத்துறையூடாக பிரதிநிதித்துவப்படுத்தியவர் எனக் கூறலாம். இதை நியாயப்படுத்தி அல்லது தன் பக்க நியாயத்தை இவர் உயிருடன் இருந்தபோது தன் நண்பர்கள் பலரிடம் முன்வைத்திருப்பார்.
இன்றும் இவரது பல நண்பர்கள் அவர் இறுதிக் காலங்களில் முன்வைத்த அரசியலை நியாயப்படுத்தி வாதிக்கலாம். ஆனால் தனது தொடர்பூடக ஆற்றல்கள் அனைத்தையும் புலிகளை நியாயப்டுத்துவதிலும், அவர்களது இராணுவ தந்திரங்களையும் ஆற்றல்களையும், புகழ்பாடுவதற்கு மட்டும் பயன்படுத்தியமையால் புலிகள் தொடர்பான ஒரு மாயை தமிழ் பேசும் மனிதர்களிடமும் குறிப்பாக புகலிட மனிதர்களிடமும் மற்றும் சிங்கள பேசும் மனிதர்களிடமும் ஏற்படுத்தினார் என்றால் தவறல்ல. அதாவது புலிகளின் இராணுவ ஆய்வாளராக இவரும் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ ஆய்வாளராக இக்பால் அத்தாஸம் இருந்தார்கள் எனக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றே கருதுகின்றேன். இதற்கு மாறாக புலிகள் முன்னெடுத்த குறுகிய நோக்கிலான ஆயுதப் போராட்டம் மற்றும் அது செல்லும் திசை தொடர்பாக தனது எழுத்தை ஆரோக்கியமான விமர்சனக் கண்ணோட்டத்துடன் முன்வைத்திருந்தால் சிலவேளைகளில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் நிலையைத் தவிர்த்திருக்காலாமா என உணர்கின்றேன்.
இவர் 2005 ஆண்டு இறந்தபொழுது, இவர் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருந்தேன். தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்ததாகவும் அறிகின்றேன். இதில் ஒரு விடயம் குறிப்பிட்டிருந்தேன். அதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது எனக் கருதுகின்றேன். அதாவது ஒருவரது அரசியல் நிலைப்பாட்டைப் பொருத்து ஊடகங்களும் ஊடகவியளாலர்களும் அவரை எவ்வாறு விளிக்கின்றனர் என்பது தொடர்பானதே அது. அதாவது தமது கருத்துக்கு சார்பானவராக இருந்தால் “அவர்” என மதிப்புடனும் மரியாதையுடனும் எழுதுவார்கள். இதற்கு மாறாக தமது கருத்துக்கு எதிரானவராக இருந்தால் “அவன்” என எழுதுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறன சொற்கள் எழுதியவரது அரசியலை மட்டும் வெளிப்படுத்தவில்லை மாறாகா ஒரு ஊடகவியளாலராக அவரது நடுநிலையாளராக இருக்கவேண்டிய ஊடக தருமத்தை கேள்விக்குட்படுத்துகின்றது என குறிப்பிட்டிருந்தேன். பல ஊடகவியளாளர்கள் எழுத்தாளர்கள் தமது சமூகத்தின் பிரதானமானதும் பொதுவானதுமான நீரோட்டத்துடன் இணைந்தே தமது ஊடக செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது எந்தவகையிலும் பிரயோசனமானதல்ல. பொதுவான மனிதர்களிடம் இருக்கின்றன அல்லது அவர்கள் மேல் நிலைநாட்டப்பட்ட கருத்தை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதுவதன் மூலம் குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது ஊடகவியளாலர் அக் குறிப்பிட்ட காலத்தில் பிரபல்யமடையலாம். ஏனனில் தம்மை பிரதிபலிக்கும் எழுத்துக்களை எழுதும் எழுத்தாளர்களை பொது மனிதர்கள் எப்பொழுதும் கொண்டாடுவார்கள். இதற்கு மாறாக ஒரு பொது கருத்துக்கு எதிரான அல்லது அதை விமர்சனபூர்வமாக முன்வைக்கும் கருத்துக்கு பரவலான வரவேற்பு இருக்காது.
இந்த நிலைமையானது இலங்கையில் மட்டுமல்ல பொதுவாக உலக வரலாற்றில் காணப்படுகின்ற ஒரு பொதுவான தன்மையாகவும் உண்மையாகவும் இருக்கின்றது. இதனால்தான் சமூக கருத்துக்களை சம்பவங்களை ஆரோக்கியமான விமர்சன கண்ணோட்டத்துடன் பார்த்து முன்னெடுத்து செல்லுகின்ற ஒரு கலாசாரமோ அல்லது இந்த நிலையில் செயற்படுகின்ற ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தமிழ் சுழலில் இன்று இல்லை இல்லது மிகவும் குறைவாக இருக்கின்றது என்பது கவலைக்கிடமானதும் துர்ப்பாக்கியமானதுமான ஒரு நிலையுமாகும். இதற்கு இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கிலிருக்கும் சுழலும் ஒரு காரணம் என்பது நாமறிந்ததே.
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒன்பது ஊடகவியளாலர்கள் அல்லது ஊடக நிறுவனர்கள் தேர்தலில் பங்குபற்றியிருந்தனர் என பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிலங்காவில் ரூபவாகினியின் பணிப்பாளராக இருந்த பரணவித்தான மகிந்தவின் கட்சி சார்பா பங்குபற்றி வெற்றியீட்டியுள்ளார். இதில் பரணவித்தான தனது மாணவப் பருவ காலத்திலிருந்தே ஜாதிக்க சிந்தனையை பின்பற்றுபவராகவும் அந்த இயக்கத்தின் முக்கிய பிரச்சாரராகவும் இருந்துள்ளார். இவருக்கு அரசியல் புதியதல்ல. சிறிரங்கா என்பவரும் ஊடகத்துறையிலிருந்து வந்து ஐ.தே. கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய போதும் குறிப்பிட்ட அரசியல் கருத்து சார்ந்து தன்னை வெளிப்படுத்தியவர் அல்ல இவர். வடக்கு கிழக்க பகுதியில் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் த.தே. கூ சார்பாக தேர்தலில் பங்குபற்றி வென்றுள்ளார். இது போன்று பலர் ஊடகத்திலிருந்து அரசியலுக்கும் அரசியலிருந்து ஊடகத்துறைக்கு மாறி மாறி பயணிப்பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கும் ஊடகங்கத்துறைக்குமான உறவுகள் சிக்கலானதாக இருந்தபோதும் எந்தளவு ஊடக தர்மத்தை மதித்து அதனது சுயாதீனத்தை காப்பாற்றுவார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களும், இவர்கள் சார்ந்த ஊடகங்களும் வரலாற்றில் மதிப்பிடப்படும்.
இதனடிப்படையில் நாம் கற்க வேண்டியதும் புரிந்துகொள்ள வேண்டியதும் என்னவெனில் ஒரு ஊடகமோ அல்லது ஊடகவியளாலரோ தனது அரசியலுக்கு அப்பாற்பட்டு ஊடகத்துறை சுதந்திரத்தையும் சுயாதீன தன்மையையும் மதித்து தமக்கு அல்லது தனக்கு எதிரான சம்பவங்களுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவது ஊடக தர்மத்தை பொருத்தவரை முக்கியமானது என்பதே. அப்பொழுதுதான் ஒரு ஊடகவியலாளர் அரசியலில் ஈடுபட்டபோதும் தான் சார்ந்த ஊடகத்தின் சுயாதீன தன்மை பாதிக்காது செயற்படலாம். இதேபோல் அரசியல் செயற்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் ஊடகத்துறையை எவ்வாறு ஒரு அரசியற் செயற்பாட்டிற்காவும் பொது மனிதர்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் ஒரு கருவியாக ஆரோக்கியமாக பயன்படுத்துவது என்பதை பற்றி சிந்திப்பதே. இவ்வாறான ஒரு வழிமுறையே இனிவரும் (சில) காலங்களுக்கான முக்கியமான ஆராக்கியமான ஒரு அரசியல் செயற்பாடாக இருக்கும் என நம்புகின்றேன். இதை செய்ய நாம் தயாராக இருக்கின்றோமா? தமிழ் பேசும் மனிதர்களுக்கான உலகளாவியளவில் ஒரு ஆரோக்கியமான பத்திரிகையை கொண்டுவரமுடியுமா? இதை இன்று செய்யத தவறுவோமாயின் பிற்போக்காளர்களதும் இலாபத்தையே நோக்கமாகக் கொண்ட வியாபாரிகளினது பலம் மட்டுமல்ல அவர்களது கருத்துக்களே என்று சமூகத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பனவாக இருக்கும். இது எந்தவகையிலும் சமூக மாற்றத்திற்கு வழிகோலாது என்பது நாம் அறிந்துள்ள கசப்பான ஒரு உண்மை.