யாழ்குடா நாட்டில் இடம்பெறும் கடத்தல், கொலை, கொள்ளைச் சம்வங்களையடுத்து வதந்திகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடத்தல், கொள்ளை, கொலை செய்யப்பட்டதான உண்மையற்ற வதந்திகள் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு அவை காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. கடந்த சில தினங்களாக வடமராட்சிப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிற வதந்தி பரவியதால் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்பிற்கும் உள்ளாகினர். வடமராட்சியில் இரு தினங்களாக மக்கள் ஆறு மணிக்குப்பிறகு விடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வணிக நிலையங்கள் நேரகாலத்திற்கே மூடப்படுகின்றன. ( தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா )
இதே வேளை, யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுக்க சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்படுவர் என யாழ். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எனினும் கடந்த 2ம் திகதி நெல்லியடியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் 25 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சமட்பவத்தையடுத்து, பொது மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதன் காரணமாக பலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இலங்கையின் தென்பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கூட செல்லத் தொடங்கினர். போரின் முடிவின் பின்னர் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கொழும்பு மற்றும், தென்பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். மேற் குறிப்பிட்ட படுகொலைச் சம்பவமானது யாழ்ப்பாணத்தில் கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி விட்டதோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது மக்கள் இதனால் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.