மே 6 உள்ளுராட்சி கவுன்சில்களுக்கான தேர்தலில் பல தமிழர்கள் களமிறங்கி உள்ளனர்! : த ஜெயபாலன்

Mayor_and_Cllr_Pongal_14Jan10மே 6 பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் லண்டனில் உள்ள உள்ளுராட்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றது. லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்ட போதும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் கவுன்சிலர்களே தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தமிழ் மக்கள் சரியான தேர்தல் பிரிவுகளை இனம்கண்டு போட்டியிட்டு தமிழ் மக்களை தமக்க்கு முழுமையாக வாக்களிக்கச் செய்ய முடிந்தால் 60க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்ய முடியும் என மதிப்பிடப்படுகின்றது. ஆனால் ஒரே தேர்தல் பிரிவில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டு தமிழர்கள் தெரிவு செய்யப்படுவதை தடுக்கின்ற முயற்சிகளே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. அதுவும் தமிழ் தேசியத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை நியூஹாமில் உள்ள வோல் என்ட், ஈஸ்ற்ஹாம் நோத் ஆகிய இரு தேர்தல் பிரிவுகளில் 7 பேர் போட்டியிடுகின்றனர். நியூஹாம் பகுதியின் ஒரே தமிழ் கவுன்சிலர் போல் சத்தியநேசன் முதன் முதலில் வெற்றி பெற்ற வோல் என்ட் தேர்தல் பிரிவில் . வரதீஸ்வரன் கனகசுந்தரம் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து லிபிரல் டெமொகிரட் கட்சி சார்பில் பிரபாகரன் கொன்சவேடிவ் கட்சி சார்பில் ராஜ்குமார் ஆகிய இரு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

நியூஹாமின் மற்றுமொரு தேர்தல் பிரிவான ஈஸ்ஹாம் நோத்தில் மூன்று தடவைகள் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்ட போல் சத்தியநேசன் தொழிற் கட்சியின் சார்பில் நான்காவது தடவையும் போட்டியிடுகின்றார். இவருக்குப் போட்டியாக வசந்தா மாதவன் துரைக் கண்ணன் ஆகிய இருவர் கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். சக்திவேல் லிபிரல் டெமொகிரட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.

60 கவுன்சிலர்களைக் கொண்ட நியூஹாம் கவுன்சிலில் 54 கவுன்சிலர்கள் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் போல் சத்தியநேசன் ஒருவரே தமிழ் கவுன்சிலராக உள்ளார். லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற நியூஹாம் கவுன்சிலில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றனர். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் கவுன்சிலர்கள் வருவதற்கு வாய்ப்பு இருந்த போதும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரே தேர்தல் பிரிவில் நிற்பதால் தமிழ் வாக்குகள் இங்கும் பிளவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக தமிழ் தேசியத்தின் பெயரில் அணிதிரண்ட ஒரு பிரிவினர் தற்போது ஈஸ்ற்ஹாமில் கொன்சவேடிவ் கட்சிக்கு அலுவலகம் ஒன்றைத் திறந்து ஈஸ்ற்ஹாமில் உள்ள ஒரே தமிழ் கவுன்சிலரான போல் சத்தியநேசனை தோற்கடிப்பதில் குறியாக உள்ளனர். இத்தமிழ் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி கட்சி கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட தாக்குதலாக நடாத்தப்படுகின்றது. ஏற்கனவே கவுன்சிலராக இருந்த போல் சத்தியநேசனுக்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததும் தெரிந்ததே.

தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கான தனது சேவை என்றும் போல் தொடரும் எனத் தெரிவித்தார் போல் சத்தியநேசன். உள்ளாட்சித் தேர்தலிலும் நாடு தழுவிய ரீதியிலும் தொழிற்கட்சியின் நீண்ட கால ஆட்சி மீது மக்களுக்கு இயல்பான சலிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமது பகுதியில் தனது வாக்கு வங்கி பலமாகவே இருப்பதாகவும் அவர் தேசம்நெற்க்கு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கிழக்கு லண்டனைச் சேர்ந்த நியூஹாம் கவுன்சிலின் அயல் கவுன்சில்களான வோல்தம்ஸ்ரோ கவுன்சிலிலும் ரெட்பிரிஜ் கவுன்சிலிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இப்பகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் ஒரே தேர்தல் பிரிவில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வோல்தம்ஸ்ரோவில் தொழிற்சங்கமும் சோசலிஸ் பார்ட்டியும் இணைந்து போட்டியிடுகின்றனர். தனபாலசிங்கம் உதயசேனன் வோல்தம்ஸ்ரோ ஹயம்ஹில் தேர்தல் பிரிவில் போட்டியிடுகின்றார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் உதயசேனனே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிக் கருத்துக்களில் நின்று தொடர்ச்சியான உள்ளுர்ப் போராட்டங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரேட்பிரிஜ் கவுன்சிலில் தொழிற்கட்சி சார்பில் தவத்துரை ஜெயரஞ்சன் நியூபரி தேர்தல் பிரிவிலும் கௌரி என்பவர் கிலேஹோல் தேர்தல் பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் போல் சத்தியநேசனைத் தவிரவும் கடந்த ஆட்சிக் காலத்தில் கவுன்சிலாகத் தெரிவு செய்யப்பட்ட எலிசா மஅன் (லிப் டெம்) – சதேக் கவுன்சில், யோகநாதன் மற்றும் அவரது மகன் (லிப் டெம்) – கிங்ஸ்ரன் கவுன்சில், சசிகலா (லேபர்) தயாஇடைக்காடர் (லேபர்), மனோ தர்மராஜா (லேபர்) ஆகிய மூவரும் ஹரோ கவுன்சில் – இவர்களும் இந்த உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத பலரும் இத்தடைவ மீண்டும் களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் உதயசேனன் போன்ற புதுமுகங்களும் இத்தேர்தலில் களமிறங்கி உள்ளனர்.

மே 2ல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டு வீடுகளைத் தட்டியவர்களை சிலர் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதாக அல்லது உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகக் குழம்பிய சில சம்பவங்களும் நடந்துள்ளது. இலங்கைத் தேர்தல் போன்று பிரித்தானியாவில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழப் பாராளுமன்றத் தேர்தலிலும் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்து சில பகுதிகளில் மீளவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சில ஆயிரம் வாக்காளர்கள் ஏகபோக பிரதிநிதித்துவக் கொள்ளை அடிப்படையில் விளையாட்டாக நடத்திய தேர்தலிலேயே மோசடி செய்து வெல்வதற்கு சிலர் முயற்சித்துள்ளனர் என்பது வேடிக்கையானதாக அமைந்துள்ளது. பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முன்பு குறிப்பிட்டுள்ள தேர்தல்களிலும் பார்க்க நியாயமான முறையில் நடத்தப்படும் என்பதில் ஐயம்கொள்ள வேண்டியதில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • sam
    sam

    //குறிப்பாக தமிழ் தேசியத்தின் பெயரில் அணிதிரண்ட ஒரு பிரிவினர் தற்போது ஈஸ்ற்ஹாமில் கொன்சவேடிவ் கட்சிக்கு அலுவலகம் ஒன்றைத் திறந்து ஈஸ்ற்ஹாமில் உள்ள ஒரே தமிழ் கவுன்சிலரான போல் சத்தியநேசனை தோற்கடிப்பதில் குறியாக உள்ளனர். இத்தமிழ் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி கட்சி கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட தாக்குதலாக நடாத்தப்படுகின்றது//

    இது இந்த கோஸ்டி தமக்கு நிதி சேகரித்தல் என்ற கொள்கையை கொண்டவர்கள்/

    //உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் உதயசேனனே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடதுசாரிக் கருத்துக்களில் நின்று தொடர்ச்சியான உள்ளுர்ப் போராட்டங்களில் இவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது//

    இது மாறிவரும் உலகில் சோசலிஸ்ட்டுக்கள் சமூகமாற்றத்தினை ஏற்ப்படுத்தும் ஒரு முயற்சி.

    Reply
  • gotapaya
    gotapaya

    சிறிலங்கா புலனாய்வுத்துறையினரோடு நெருங்கிச்செயற்படும் போலுக்கு வாக்களியுங்கள்!

    Reply
  • padamman
    padamman

    தமிழ் தேசியம் என்ற பெயரில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரின் பின் கதவை தட்டுவதை போன்று போல் சத்தியநேசன் பின் கதவை தட்டவில்லை ஆனால் கோத்தாபாயா அல்லது மகிந்தா போன்றோர்க்கு முன்னால் நின்று மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசும் தைரியமும் நேர்மையும் சேவை மனப்பான்மையும் நிறையவே உண்டு. உங்கள் தேசிய தலை போன்று அம்மணமாய் நிற்கவில்லை

    Reply
  • thurai
    thurai

    போரின் மத்தியிலும், பயங்கரவாதிகளின் மத்தியிலும் வறுமையின் மத்தியிலும் வாழ்ந்த, வாழும் ஈழத்தமிழர்களிற்கு நிகராக உலகில் எந்தத் தமிழனையும் சமனாக நிறுத்த முடியாது.

    புலிகளின் கொடுமைகள் புலம்பெயர் நாடுகளில் தலைதூக்கியாடும்போது அதனைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாமல் புலம்பெயர் நாடுகளில் வாய்மூடி இருந்தவர்கலெல்லாம் இனிமேல் யாருக்காக எங்கே உருமைக்காக குரல் கொடுக்கப்போகிறார்கள்.

    ஈழத்தமிழர் துன்பங்களில் ஆழ்ந்தபோது மக்களோடு மக்களாக யார் நின்றார்களோ அவர்களையே அம்மக்கள் ஆதரிக்கவும் மதிப்பளிக்கவும் வேண்டும் தவறின் மீண்டும் ஈழத்தமிழர் அழிவினையே நோக்கிச் செல்வார்கள்.

    துரை

    Reply
  • ram
    ram

    போல் வென்றுவிட்டார். வாழ்த்துக்கள்.

    Reply