ஆசிய பசுபிக் அமைப்பின் 9வது வட்ட மேசை மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடை பெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் இலங்கை வரவுள்ளனர். இம் மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு இன்டர்கொன்டினல் ஹோட்டலில் நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் திலக் கொலரே, அமைப்பின் தலைவர் கலாநிதி அந்தனி ச்யு, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் பத்மினி பட்டுவிட்டகே, 09வது வட்டமேசை மாநாட்டுக்கு தலைமை வகிக்கவிருக்கும் பொறியி யலாளர் சேன பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஸ்திரமான நுகர்வு மற்றும் உற்பத்தி எனும் தொனிப்பொருளிலேயே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆசிய பசுபிக் வட்டமேசை மாநாடு தெற்காசிய நாடொன்றில் நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகுமென கலாநிதி அந்தனி க்யூ தெரிவித்தார்.
இம்மாநாட்டினை இலங்கையில் நடத்துவதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த பல புத்திஜீவிகளின் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள முடிவதுடன், உல்லாசப் பயணிகளுக்கான வருகையை அதிகரிக்க முடியுமெனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உரையில் கூறினார்.
ஆசிய பசுபிக் அமைப்பின் 7வது வட்ட மேசை மாநாடு வியட்நாமிலும் 08வது மாநாடு தன்சானியாவிலும் நடைபெற்றன. அப்போது தீர்மானிக்கப்பட்டதற்கமைய 09வது மாநாடு இலங்கையில் ஜூன் 10 முதல் 12 வரை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இதில் அங்கத்துவம் வகிக்கும் பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனா, வியட்நாம், கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்களது அனுபவங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நாட்டிலுள்ள அதிகூடிய வளங்களைப் பயன்படுத்தி சூழல் மாசடையாத வகையில் சிறந்த பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வதே மாநாட்டை நடத்துவதற்கான எமது இலக்கு என பொறியியலாளர் சேன பீரிஸ் கூறினார்