11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு நீதி இன்னமும் வழங்கப்படவில்லை ஜெனரல் சரத் பொன்சேகா

sarath_.jpg“சரண டைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கும் இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை. அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அந்த இளைஞர்களை விடுதலை செய்ய அல்லது வழக்குத் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.ஜெனரல் சரத் பொன்சேகா “பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிலுள்ள ஒரு நாட்டில் அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய ஜெனரல் பொன்சேகா மேலும் கூறியதாவது;

“நான் 2 ஆவது லெப்டினன்டாக இருந்த போது முதன் முதலில் பழைய பாராளுமன்றத்துக்குச் சென்றுள்ளேன். இராணுவ வெற்றியின் பின்னர் ஓர் இராணுவத் தளபதியாக இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்தேன். அப்போது ஜனாதிபதி எனது பெயரைக் குறிப்பிட்டு இந்தப் பாராளுமன்றத்தில் வைத்து வெகுவாகப் பாராட்டினார்.

ஆனால், இன்று மீண்டும் இந்தப் பாராளுமன்றத்துக்கு அரசியல்வாதியாக ஒரு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியாக வந்துள்ளேன். எனது அரசியல்வாழ்க்கையைக் கட்டியெழுப்ப எனக்கு வலுவூட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி.ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என்மீது சேறு பூசிய , என்மீது பழிகளைச் சுமத்தியவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் எனக்கு ஆதரவளித்த விடுதலைப் புலிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வாழாதவர்கள் மிகக் குறைவானவர்களேயுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழேயே மக்கள் வாழ வேண்டும். ஆனால், ஒரு ஜனநாயக நாடு இருந்ததாக எவருக்கும் நினைவில்லை. ஒரு நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழ் ஆட்சி செய்ய முடியாது விட்டால் ஆட்சியாளர்கள் தான் வெட்கப்பட வேண்டும். தற்போது இந்த நாட்டிற்கு அவசரகாலச் சட்டம் என்பது தேவையற்றதொரு விடயம்.

தற்போது மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் துன்புறுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலுமேயே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிலை. தவறானவர்களிடம் அதிகாரங்களைக் கொடுப்பது குரங்கின் கையில் கூர்மையான கத்தியொன்றைக் கொடுப்பதற்கு சமனானது. குறுகிய நோக்கங்களுடன் செயற்படுபவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படும்.

இந்த நாட்டில் முன்னர் சிறந்த பாதுகாப்பு அமைச்சு செயலர்கள் இருந்தார்கள். அவர்கள் சட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். அவர்களால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படவில்லை. தற்போது நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை அடக்கி வைக்கும் அவசரகாலச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டில் நியாயம் நிலை நிறுத்தப்படுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவுக்கு அல்ஹைடா மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றபோதும் அந்நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இங்கு மியன்மார் போன்ற இராணுவ ஆட்சி நடந்தால் அதனை ஏற்க முடியாது. அனைவரும் சமமான உரிமைகளுடன் வாழும் நாடு என்பதை உணர்ந்து மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் செயற்பட அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.

தற்போது இந்த நாட்டில் யுத்தம் இல்லை. கடந்த ஒரு வருட காலமாக எந்தப் பயங்கரவாத நடவடிக்கையும் இடம்பெறவில்லை. மக்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. நாட்டுக்கு ஆபத்தில்லை. எனவே, இந்த நாட்டுக்கு அவசரகாலச் சட்டம் இனித் தேவையில்லை.பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும்போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவது வையற்றதொரு விடயம்.

யுத்த காலத்தின் போது சரணடைந்த 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். நாம் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள போதும் இன ஐக்கியத்தை புரிந்துணர்வை ஏற்படுத்தி நியாயத்தை நிலைநாட்டத் தவறிவிட்டோம். ஆனால், இவற்றையே மக்கள் அரசிடம் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றங்கள் நீதியாகச் செயற்பட வேண்டும். சிறைப்படுத்துவதன் மூலமோ நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலமோ தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 100 சிறைகளில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் வருவோம்.

தம்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நாட்டுத் தலைமைக்கு இருக்குமாக இருந்தால் அவசரகாலச் சட்டம் தேவையில்லை. தாம் யாருக்கு வாக்களித்தோம் என்று கூட வெளியில் கூற முடியாத நிலையில் இன்று மக்கள் உள்ளனர். அப்படிக் கூறுவோர் நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை. இந்த நாட்டில் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து. கருத்துகளை வெளியிட மக்கள் அச்சமடைகின்றனர். இந் நாட்டில் தொடர்ந்து சுதந்திரமாக வாழ முடியாத நிலை. பலர் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர். ஊடகங்களின் வாய்கள் மூடப்படுகின்றன. மக்களை அமைதியாக வைத்திருக்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

உண்மை பேசுவோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். ஆனாலும், சட்டம் தன் பணியைச் செய்யும். உண்மை ஒருநாள் வெளிப்படும். நீதி நிலைநாட்டப்படும். இந்த நாட்டின் ஆட்சியை எதிர்த்த மக்களுக்கும் எனது கட்சிக்கு வாக்களித்த 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் எனக்கு வாக்களித்த 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்”

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *