சுகாதார பட்டப்படிப்பு மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்கான கால எல்லையை ஒரு வருடத்தால் குறைத்ததை எதிர்த்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் விகாரமகாதேவி பூங்கா முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பித்தது. பெருமளவு பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மாணவர்கள் அலரிமாளிகை நோக்கி செல்லாது தடுக்க நகரமண்டப சுற்றுவட்டத்தில் அப்பாதையை மறித்து பொலிஸார் நின்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து திரும்பி லிப்டன் சுற்றுவட்டம் நோக்கிச் சென்றனர்.
இந்நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு முன்னால் சென்று மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு செல்வதாகக் கருதி ஆணைக்குழு அமைந்துள்ள லோர்ட் வீதியில் தடுப்பதற்கு காத்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் டீன்ஸ் வீதி வழியாக சென்றனர். இந்நிலையில் அவர்களுக்கு முன்னால் சென்று 200 மீற்றர் தூரத்தில் இடைமறித்தனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், ஏனைய மூன்று மாணவர்களுக்கு காயமேற்பட்டது. நிலைமையை சமாளிப்பதற்கு கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிற்பகல் 12.45 மணியளவில் வந்தடைந்து ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் லோட் வீதி வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்ய சிரமப்பட்டனர். எமது பட்டப்படிப்பு 5 பாடநெறிகளாக 4 வருடம் இடம்பெற்று வந்தது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே தீர்மானித்தது.
நான்கு வருட பாடநெறியை மூன்று வருடங்களில் முடிப்பதற்கு அரசு மேற்கொண்ட தீர்மானம் நியாயமானதா? இந்த பட்டப்படிப்பை மாணவர்கள் எவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்யமுடியும். இதனால் சுகாதாரத் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமென்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன கருத்துத் தெரிவித்தார்.
மாணவர்கள் பிரதியமைச்சர் நந்திமிந்திர ஏக்கநாயக்கவுடன் சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது உயர்கல்வியமைச்சர் பதவியேற்றதும் ஓரிரு தினங்களில் அழைத்தது பிரச்சினைகளையும் பேசித்தீர்வுகாண்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே ஆர்ப்பாட்டத்தை பிற்பகல் 2.30 மணியளவில் மாணவர்கள் கைவிட்டனர்.