மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாபுக்கு தூக்குத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் கசாப் குற்றவாளி என மூன்று நாட்களுக்கு முன் நீதிபதி தஹில்யானி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். 166 பேர் பலியான இவ்வழக்கை அரிதினும் அரிதாகக் கருதி அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் தனது வாதத்தின்போது தெரிவித்தார். கசாபின் இளம்வயதைக் கருத்தில்கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கசாபின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கும் நோக்கத்துடன் கசாப் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக நீதிபதி தஹில்யானி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கொலை, சதிசெய்தல், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட 5 குற்றங்களுக்காக அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
தீர்ப்பு விவரத்தை கேட்டவுடன் கசாப் நீதிமன்றத்தில் தேம்பி அழுதார். தீர்ப்பைப் படித்து முடித்ததும், தீர்ப்பு விவரத்தை கசாபுக்கு நீதிபதி இந்தியில் விளக்கினார். தீர்ப்பு குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என கசாபிடம் நீதிபதி கேட்டார். எனினும் அதற்கு கசாப் பதிலேதும் கூறாமல் தலையை மட்டும் அசைத்தார். இதைத்தொடர்ந்து அவரைச் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.
basi
பயங்கரவதாத்திற்கான தண்டணை வழங்கப்பட்டாலும் அது நிறைவேற்ற நாள் ஆகும்.தாமதமாக வரும் நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும்