விடுதலைப் புலிகள் வெற்றி கொள்ளப்பட்டு, போரை முடிவிற்குக் கொண்டு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இவ்வெற்றியை சிறிலங்கா அரசாங்கம் தற்போது கொண்டாடுகின்றது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலத்திட்டங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் துரித செயற்பாடுகளை மேற்கொள்ள வில்லை என போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் தெரிவிக்கின்றனர். வன்னியின் மேற்குப் பகுதிகளில் மீள் குடியேற்றப் பணிகள் இன்னமும் முழுவதுமாக நிறைவடையவில்லை. அதாவது கிளிநொச்சியின் ஏ-9 பிரதான பாதையின் மேற்குப் பக்கமாக மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், அங்கு சில பகுதிகளில் இன்னமும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கிளிநொச்சியின் கிழக்குப் பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
திருவையாறு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் தற்போது அவரவர்களின் காணிகளில் குடியமர்த்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மீள் குடியமர்த்தப்படும் மக்கள் வவனியா முகாம்களிலுள்ளவர்களும், முகாம்களிலிருந்து ஏற்கனவே வெளியேறி வவுனியாவில் உறவினர், நண்பர்கள் விடுகளில் தங்கியிருந்தவர்களுமாவர். இறுதிக்கட்டப் போரின் போது, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளைக் கழற்றித் தம்முடன் கொண்டு சென்றதுடன், வீட்டு உடமைகளையும் முடிந்தவரையில் எடுத்துச்சென்றனர். போர் தீவிரமான போது, மக்கள் அடுத்தடுத்து இடம்பெயர வேண்டியிருந்த போது, சகல உடமைகளையும் விட்டு விட்டு வெறுங்கையுடனேயே சென்றனர். சிலர் உடமைகளை தங்கள் வீடுகளிலேயே விட்டுச்சென்றனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் தங்களின் உடமைகள் வீட்டுக்கூரைகள் என்பன களவாடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதே வேளை, இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ள சில இடங்களிலிருந்து மக்கள் விட்டுச்சென்ற அவர்களின் உடமைகளை எடுத்த வருவதற்கு தற்போது படையினரால் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், அப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் தங்கள் உடமைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றனர். சிலர் எஞ்சியுள்ள பொருட்களை வாகனங்களில் ஏற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.