பாராளுமன்ற உறுப்பினரான தன்னை இராணுவ நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு வரவிடாமல் தடுத்ததன் மூலம் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா, அதற்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்தார்.
சபாநாயகரின் உத்தரவைக்கூட இராணுவ நீதிமன்றம் உதாசீனம் செய்ததன் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் சவால் விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா இதுதொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
நேற்று முன்தினம் புதன்கிழமை நான் பாராளுமன்றத்துக்கு வருவதற்குத் தயாரானபோது இராணுவ அதிகாரிகள் பாராளுமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முடியாதெனவும் அதற்கான அனுமதி தமக்குக் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்ததோடு, இன்றைய தினம் புதன்கிழமை இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியுள்ளதாகக் கூறி பாராளுமன்றம் செல்வதைத் தடுத்தனர். என்னை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்குமாறு சபாநாயகர் இராணுவ நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்த நிலையிலும் கூட அந்த உத்தரவைப் புறக்கணித்ததன் மூலம் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணாக இராணுவம் செயற்பட்டுள்ளது. இந்தத் தவறான முன்னுதாரணம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு எதிர்காலத்தில் பாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம்.
எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் கூடி இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துள்ளது. இதனடிப்படையில் இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் குற்றச்சாட்டைச் சமர்ப்பிக்கவிருக்கின்றோம்.
இந்த பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல் தொடர்பாக புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்து தமது கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர். இராணுவம் சட்டவிரோதமானதொரு நடைமுறையைக் கையாண்டுள்ளது. சிறப்புரிமை மீறல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் புதன்கிழமை பாராளுமன்றத்தில் கிளப்பியபோது சபாநாயகர் ஆசனத்திலிருந்தவர் அதனைச் செவிமடுக்கத் தவறியுள்ளார்.
அரசாங்கம் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. சட்ட மா அதிபர் கூட பாராளுமன்றத்துக்கே கட்டுப்படவேண்டும். அவ்வாறான நிலையில் பாராளுமன்றம் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறுவது சட்டவிரோதமானதாகும். பாராளுமன்றம் தொடர்பான அரசியலமைப்பு விதிகளுக்கமையவே இந்த சிறப்புரிமை மீறல் தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்தரப்பு இந்த முடிவைத் தெரியாமல் மேற்கொள்ளவில்லை. நன்கு தெரிந்த நிலையிலேயே என்னை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. தெரியாதது போல் இப்போது நடந்துகொள்ள முயற்சிக்கின்றது எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.